

மொழி தெரியாமல் நடிப்பது பின்னடைவுதான் என நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார்.
’பழனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவியுடன் முதன்முறையாக இணைந்து ’கோமாளி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டை ஒட்டி பல ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார் காஜல்.
'தி இந்து' ஆங்கிலத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தொடர்ந்து டப்பிங் குரல் பயன்படுத்துவது பற்றி கேட்டபோது, "டப்பிங் ஒரு சாதகம் என்பதை மறுப்பதற்கில்லை. விரைவில் நானே என் குரலில் டப்பிங் செய்வேன். மொழி தெரியாமல் இருப்பது பின்னடைவு தான். எனக்குத் தமிழ் புரியும். சரளமாகப் பேச வராது. நம்பிக்கை குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாகவே என்னால் மொழிகளை எளிதில் கற்க முடியாது. இந்தியும் சுமாராகவே பேசுவேன். தெலுங்கில் முயற்சி செய்துள்ளேன். ஆனால், அது ஒத்துவரவில்லை என மாற்றிவிட்டார்கள்" என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
காஜல் அகர்வால் நடிப்பில் 'கோமாளி' வெளியாகும் அதே தேதியில் தெலுங்கில் ’ரணரங்கம்' என்ற திரைப்படம் வெளியாகிறது. அடுத்து 'குயின்' இந்திப் படத்தின் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கவுள்ளார்.