

தமிழில் மல்டி ஸ்டார் படங்கள் அதிகம் வராதது ஏன்? என்பதற்கு ஜெயம் ரவி பதில் அளித்துள்ளார்.
ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடவுள்ளது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு பாராட்டும், சர்ச்சையும் ஒரு சேரக் கிடைத்தன. ரஜினியின் அரசியல் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கிவிடுவதாக படக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 24-வது படமாக உருவாகியுள்ளது 'கோமாளி'. மல்டி ஸ்டார் படங்கள் குறித்து ஜெயம் ரவியிடம் கேட்ட போது, "தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஏன் பாடல் வரிகள் கூட ஒரே ஒரு மனிதரின் மூளைக்குள் இருந்து வருகிறது. ஒரே ஒருவரின் சிந்தனை எனும்போது அவரால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் யோசிக்க முடியும்.
அதனால் அவர்கள் எழுதும் கதையும் ஒரே ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியதாகவே இருக்கும். அதனால்தான் தமிழில் நிறைய மல்டி ஸ்டார் படங்கள் வருவதில்லை. ஆனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் இந்த நிலை இல்லை" என்று தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து, தனது 25-வது படமாக லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தை முடிவு செய்திருக்கிறார் ஜெயம் ரவி. இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.