

'ஜாக்பாட்' இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஹன்சிகா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
ஜோதிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜாக்பாட்'. 2டி நிறுவனம் தயாரித்த இந்தப் படம் வசூல் ரீதியாக கணிசமான வரவேற்பைப் பெற்றது. துணிச்சலான சண்டைக் காட்சிகளுக்காக ஜோதிகாவுக்குப் பாராட்டு கிடைத்தது. இந்தப் படத்தை இயக்கியவர் கல்யாண்.
’ஜாக்பாட்’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா நடிக்கும் படத்தை கல்யாண் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒப்பந்தம் ரீதியாக முடிவாகாமல் இருந்தது. தற்போது ஒப்பந்தம் கையெழுத்து முடிந்து, படத்தின் பணிகளும் தொடங்கிவிட்டன.
இதில் ஹன்சிகா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பேயிடம் மாட்டிக் கொள்ளும் காவல்துறை அதிகாரியாக இந்தக் கதையை வடிவமைத்துள்ளார். தனது முந்தைய 2 படங்கள் போலவே, இந்தப் படத்தையும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இயக்கவுள்ளார் கல்யாண்.
கல்யாண் இயக்கத்தில் வெளியான 'குலேபகாவலி' படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தவர் ஹன்சிகா. தற்போது மீண்டும் கல்யாண் இயக்கத்திலேயே ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.