

'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்த அஜித்துக்கு சூர்யா - ஜோதிகா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது.
முதல் நாளே அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த மாதிரியான கதையில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரீமேக்கை தமிழுக்கு ஏற்றவாறு சரியான முறையில் மாற்றி இயக்கியதற்கும் இயக்குநர் வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்த்த சூர்யாவும் ஜோதிகாவும் அஜித்துக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுப்பிய பூங்கொத்து புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வசூல் ரீதியாகவும் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வார நாட்களில் எப்படியிருக்கப் போகிறது வசூல் என்பது அடுத்த வாரம் தெரியவரும்.