

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்
ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் கிட்டத்தட்ட 60 படங்கள் பங்கேற்கின்றன. ஷாரூக் கான், ஜோயா அக்தர், தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி, அர்ஜுன் கபூர், தபு, காயத்ரி ஷங்கர், ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளிலும் 'சூப்பர் டீலக்ஸ்' பரிந்துரைக்கப்பட்டிருந்தது. சினிமாவில் சமத்துவம் என்ற கவுரவ விருதையும் 'சூப்பர் டீலக்ஸ்' வென்றது.
ரன்வீர் சிங் நடித்த 'கல்லி பாய்' சிறந்த திரைப்படமாகவும், 'அந்தாதுன்' படத்துக்காக ஸ்ரீராம் ராகவன் சிறந்த இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'அந்தாதுன்' படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தபு, சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷாரூக் கானுக்கு சினிமாவில் சிறப்புத்தன்மை (Excellence in Cinema) என்ற விருது வழங்கப்பட்டது.