

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ள 'தாராள பிரபு' படத்தின் நாயகியாக தான்யா ஹோப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஹரிஷ் கல்யாண். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தெலுங்கில் 'யுத்தம் சரணம்' படத்தை இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார். அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
இதில் நாயகியாக நடிக்க தான்யா ஹோப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'தடம்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும், 'விக்கி டோனர்' படத்தில் முக்கியமான மருத்துவர் கதாபாத்திரத்தில் அனு கபூர் நடித்திருந்தார். தமிழில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விவேக் ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது பட விநியோகம் செய்து வரும் ஸ்கிரீன் சீன் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. தமிழ் ரீமேக்குக்கு 'தாராள பிரபு' எனத் தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, சசி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஹரிஷ் கல்யாண்.