கமல், ரஜினிக்கு ஹிட்டு; இளையராஜா அறிமுகம்; எளிமையும் பன்முகமும் கொண்ட பஞ்சு சார்..! 

கமல், ரஜினிக்கு ஹிட்டு; இளையராஜா அறிமுகம்; எளிமையும் பன்முகமும் கொண்ட பஞ்சு சார்..! 
Updated on
2 min read

- பஞ்சு அருணாசலம் நினைவுநாள் இன்று

- வி.ராம்ஜி

எண்பதுகளில் வெளியான பல வெற்றிப் படங்கள், இன்றைக்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தப் படங்களில் ஏதேனும் ஒருவகையில், இவரும் இடம்பெற்றிருப்பார். பாட்டு எழுதியிருப்பார். படத்தைத் தயாரித்திருப்பார். கதையும் திரைக்கதையும் எழுதியிருப்பார். வசனம் எழுதித் தந்திருப்பார். அவ்வளவு ஏன்... படம் தொடங்கி, கதை சரியில்லையே என்று பாதியில் நிறுத்திவிட்டு, இவரை அழைத்து போட்டுக்காட்டுவார்கள். எடுத்ததையும் பயன்படுத்துகிற விதமாக, ஓர் புதிய கதையை வடிவமைத்து, அந்தக் கதையையும் படத்தையும் சூப்பர் ஹிட்டாக்கி விடும் சினிமா ஜாலம் தெரிந்தவர் அவர். இத்தனை முகங்கள் கொண்ட அவர்... பஞ்சு அருணாசலம்.

செட்டிநாடு என்று சொல்லப்படுகிற காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் மகன். இளம் வயதில் யார் வீட்டிலிருந்தோ கேட்ட சிலோன் ரேடியோதான் இவரின் சினிமா எண்ட்ரிக்கான முதல் அலையோசை.

சென்னைக்குக் கிளம்பி வந்தார். கண்ணதாசனைச் சந்தித்தார். அவரின் ‘தென்றல் ‘ பத்திரிகையில் பணிபுரிந்தார். அதில் கதைகள் பலவும் எழுதினார். அப்படியே கண்ணதாசனிடம் உதவியாளராகவும் இருந்தார். ஆக, எழுத்து, எழுத்து என தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.

வாழ்க்கை, கவியரசு கண்ணதாசன் மூலமாக அவரை கைப்பிடித்து அழைத்து வந்து நிறைவாக ஓரிடத்தில் விட்டது. அந்த இடம்... கோடம்பாக்கம். ஏவிஎம் ஸ்டூடியோவில் செட் இன்சார்ஜ் வேலையெல்லாம் பார்த்தார். ஒருபக்கம் கவிஞர், இன்னொரு பக்கம் பிரமாண்ட ஏவிஎம்... என இவர் கற்றதெல்லாம் பாலபாடங்கள் அல்ல. பிரமாண்டமான பாடங்கள்.

சினிமாவுக்குப் பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’, ‘மணமகளே மணமகளே வா வா’ என்றெல்லாம் எழுதினார். அது இன்றைக்கும் தேவகானம். பிறகு கதை எழுதினார். படங்கள் தயாரித்தார். ஆனால் வரிசையாக தோல்வி. ஒருகட்டத்தில், ‘ஃபெயிலியர் பஞ்சு’ என்றே இவருக்கு பெயர் அமைந்தது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டே இருந்தார்.

எல்லோரும் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., என்று போய்க்கொண்டிருக்க, விஜயபாஸ்கர் என்றொரு இசையமைப்பாளரை தொடர்ந்து பயன்படுத்தினார். பஞ்சு அருணாசலமே நல்ல கதாசிரியர். ஆனாலும் எழுத்தாளர் மகரிஷி, எழுத்தாளர் சுஜாதா ஆகியோரின் கதைகளை வாங்கி, திரைக்கதையாக்கினார். வெற்றிகண்டார்.

எழுபதுகளின் நடுவே, கமல், ரஜினியின் காலம் வந்தது. இருவரின் வெற்றிகளிலும் பஞ்சுவுக்கும் பங்கு உண்டு என்று இன்றைக்கும் வரலாறு சொல்லுகிறது. ’கல்யாணராமன்’, ’ஜப்பானில் கல்யாணராமன்’, ’உல்லாச பறவைகள்’, ’எல்லாம் இன்ப மயம்’ தொடங்கி ’மைக்கேல் மதன காமராஜன்’ வரை கமலுக்கும் ’காயத்ரி’, ’புவனா ஒரு கேள்விக்குறி’, ’ப்ரியா’, ’முரட்டுக்காளை’, ’ஆறிலிருந்து அறுபது வரை’, ’எங்கேயோ கேட்ட குரல்’ என்று ரஜினிக்கும் ஹிட்டு மழை பொழியக் காரணமாக இருந்தார்.

பஞ்சுவுக்கு இசைஞானமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு தேடல் மட்டுமே தீராப்பசியுடன் இருந்தது. அந்தப் பசிக்கு தீனியென வந்தவரை, தலையில் வைத்துக் கொண்டாடினார். தமிழ் சினிமாவின் இசைப் பக்கங்களில், அந்த இசையமைப்பாளரின் பெயர்தான் எல்லாப் பக்கங்களிலும் என்று இன்றைக்கும் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், அவருக்கு நாமகரணம் சூட்டியவரே பஞ்சு அருணாசலம்தான். அந்த நாமகரணம்... இளையராஜா.

‘அன்னக்கிளி’யில் தொடங்கிய ராஜாவின் பயணம், பஞ்சுவின் கடைசிப்படம் வரை நீடித்தது. எளிமையாகவும் பட அதிபர் பந்தா இல்லாமலும் பழகுபவர் என்று பஞ்சுவுக்கு பெயர் உண்டு. ‘சகலகலாவல்லவன்’ ‘முரட்டுகாளை’ கொடுத்தவர் என்று டைட்டில்தான் சொல்லும். இவர் அப்படியான பந்தாவெல்லாம் காட்டுவதே இல்லை. பாரதிராஜாவின் ‘மண்வாசனை’க்கு வசனம் எழுதினார். பாக்யராஜின் ‘ராசுக்குட்டியை’ தயாரித்தார்.

பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரிலும் மற்ற பெயர்களிலும் கூட படங்கள் தயாரித்துக் கொண்டே இருந்தார். தன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில், ஒரு படத்தை எடுத்து, அதை பாதியில் சரியில்லை என்று நிறுத்தினார் கமல். உடனே அவர் போன் செய்து அழைத்தது பஞ்சு அருணாசலத்தைத்தான். அந்தக் கதையை அப்படியே மாற்றிக் கொடுத்தார். படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அதுதான்... ‘அபூர்வ சகோதரர்கள்’.

இப்படி எத்தனையோ வெற்றிகளையும் கலைஞர்களையும் தந்த பஞ்சு அருணாசலம், தமிழ் சினிமாவின் கம்பீரமான, அழுத்தமான பதிவு.
பஞ்சு அருணாசலம் நினைவு நாள் இன்று (9.8.19). அவரின் நினைவைப் போற்றுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in