

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' திரைப்படம், அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'வடசென்னை' படத்தைத் தொடர்ந்து, அப்படத்தின் 2-ம் பாகத்துக்கு முன்பாக 'அசுரன்' படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. தாணு தயாரித்தார். இதன் படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. 'வெக்கை' நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன்.
தற்போது இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ். இன்னும் ஒரு சில நாட்களே படப்பிடிப்பு உள்ளது. இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
அக்டோபர் 4-ம் தேதி 'அசுரன்' படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்ட பலர் தனுஷுடன் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் வெற்றிமாறன். இதனை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார்.