Published : 08 Aug 2019 17:00 pm

Updated : 12 Aug 2019 15:38 pm

 

Published : 08 Aug 2019 05:00 PM
Last Updated : 12 Aug 2019 03:38 PM

விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

nerkonda-paarvai-review

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து உரக்கப் பேசியிருக்கும் படமே 'நேர்கொண்ட பார்வை'.

இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடும் ஷ்ரத்தா, நிகழ்ச்சி முடிந்த பிறகு தன் தோழிகள் அபிராமி, ஆண்ட்ரியாவுடன் வீடு திரும்புகிறார். அதே நேரத்தில் தலையிலும் கண்ணிலும் பலத்த காயமடைந்த அர்ஜுன் சிதம்பரத்தை ஆதிக் ரவிச்சந்திரனும், அஸ்வின் ராவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். சுமார் நான்கு நாட்கள் கடந்தும் நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் மூன்று இளம்பெண்களும் தவிக்கின்றனர். மீள முடியாத மன அழுத்தத்தில் இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் இன்னொரு தோழியுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கிறார். அர்ஜுன் சிதம்பரத்தின் நண்பர்கள் தொடர்ந்து ஷ்ரத்தாவையும் அவரது தோழிகளையும் மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் போலீஸ் ஷ்ரத்தாவைக் கைது செய்கிறது.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் அஜித்துக்குத் தெரியவர, ஷ்ரத்தாவை ஜாமீனில் கொண்டு வர முயல்கிறார். அடியாட்களைப் பந்தாடி வழக்கை நேரடியாகச் சந்திக்க சவால் விடுகிறார். இசை நிகழ்ச்சி நடந்த அன்றைய இரவில் நடந்தது என்ன? அர்ஜுன் சிதம்பரம் ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? ஷ்ரத்தாவை ஏன் போலீஸ் கைது செய்தது? அஜித் யார்? அவர் வாழ்வில் நடந்த துன்பியல் சம்பவம் என்ன? நீதி வேண்டி ஷ்ரத்தாவுக்காகப் போராடும்போது வென்றது யார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

2016-ம் ஆண்டில் இந்தியில் ஹிட்டடித்த பிங்க் படத்தை தமிழுக்கே உரிய சில மாற்றங்களுடன் மறு ஆக்கம் செய்து மலைக்க வைத்துள்ளார் இயக்குநர் எச்.வினோத். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு எதிராக சமகாலத்தில் பேசாப் பொருளைப் பேசத் துணிந்த அவரது முயற்சிக்கும் அக்கறைக்கும் வாழ்த்துகள்.

படத்தின் மிகப்பெரிய ஆச்சர்யம், அதிசயம் எல்லாம் அஜித்தான். பரத் சுப்பிரமணியம் என்கிற கதாபாத்திரத்துக்கு எந்தப் பாதகத்தையும் செய்யாமல் உயர்ந்து நிற்கிறார். ஸ்டைலாக நடப்பது, பறந்து பறந்து அடிப்பது, பன்ச் பேசுவது என்று ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வழக்கமான டெம்ப்ளேட்டிலிருந்து விலகி நின்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் கதாபாத்திர நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. அந்த இடைவேளை சண்டைக் காட்சியும், என்னைப் பார்த்தா பயப்படுற மாதிரி தெரியுதா? என்று ஜெயப்பிரகாஷிடம் கேட்கும் விதமும் மாஸ் ரகம்.

முதல் பாதி முழுக்க கதைக்களத்துக்கான நியாயத்தைச் செய்ய வேண்டும் என்று ஒதுங்கி இருந்துவிட்டு இரண்டாம் பாதியில் அஜித் அசர வைக்கிறார். அதுவும் வழக்கின் முதல் நாளில் மருந்து சாப்பிட்ட களைப்பில் குறுக்கு விசாரணை செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தடுத்து விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கச்சிதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது குரலும் கம்பீரத்தின் சாட்சியாக நின்று அப்ளாஸ் அள்ளுகிறது.

தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலைக் கண்டு கொதிப்பது, போனில் மிரட்டும் நபரிடம் நேர்ல வந்து பேசு என்று கெத்து காட்டுவது, பின் விபரீதம் உணர்ந்து ஓட்டம் பிடிப்பது, கண்ணீரும் கதறலுமாக நடந்த சம்பவத்தை விவரிப்பது, தன் மீது எந்தத் தவறுமில்லை என்று நிரூபிக்கப் போராடுவது என தேர்ந்த நடிப்பில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிளிர்கிறார்.

ஷ்ரத்தாவின் தோழியாக ஃபமிதா பானு கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாசலம் பொருத்தமான வார்ப்பு. சமாதானமாகச் செல்ல நினைத்து ஸாரி கேட்பது, ஆண் திமிரில் பேசும் அர்ஜுனிடம் அப்படியே எதிர்த்து நிற்பது, சரி சரி சரி என்று செய்யாத செயலைச் செய்ததாக வாக்குமூலம் கொடுத்து வெடிப்பது, வேலை இழந்த சூழலில் கையறு நிலையை வெளிப்படுத்துவது என இயல்பான உணர்வுகளைக் கடத்துகிறார்.

ஆண்ட்ரியா தாரியங் அழுகையும் ஆற்றாமையுமாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்துள்ளார். ஆணாதிக்க மனோபாவத்தின் அதீத முகங்களாக அஸ்வின் ராவும், சுஜித் சங்கரும் வந்து போகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் தப்புக்குத் துணை போய் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் குழப்பமான மனநிலையை சரியாக வெளிப்படுத்துகிறார். வித்யாபாலன் கொஞ்ச நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பில் தனித்து ஜொலிக்கிறார்.

ரங்கராஜ் பாண்டே சில இடங்களில் செயற்கையாக நடித்திருந்தாலும் எதிர்த்தரப்பு வழக்கறிஞருக்கான வழக்கமான எதிர்வினைகளுடன் சரியாக நடித்துள்ளார். ஜூனியர் பாலையா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி கணேஷ் தகப்பனின் எந்த உணர்வையும் கடத்தாமல் வெறுமனே வந்து போகிறார்.

நீரவ் ஷா கேமரா கோணங்களில், ஃபிரேம்களில் மேஜிக் நிகழ்த்தியுள்ளார். பார்ட்டி, இசை நிகழ்ச்சி, வீடு, நீதிமன்றம் என்று எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தி லைட்டிங்கில் கவர்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உமாதேவி எழுதிய வானில் இருள் சூழும்போது படத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. பா.விஜய் வரிகளில் அகலாதே பாடல் பின்னோக்குக் காட்சி உத்திக்கு கனம் சேர்க்கிறது. அஜித் படம் என்பதால் பின்னணி இசையில் வழக்கம் போல் எக்ஸ்ட்ரா எனர்ஜியைக் கொடுத்துள்ளார் யுவன்.

காட்சி ரீதியான அழுத்தத்தை படம் முழுக்கப் பரவவிட்டு, நடந்தது என்ன? என்பதைக் கடைசியாகக் காட்டி, அலுப்பு தட்டாமல் பார்க்க வைத்ததில் கோகுல் சந்திரனின் நேர்த்தியான படத்தொகுப்புப் பணி ஆச்சர்யப்படுத்துகிறது.

ஜெயப்பிரகாஷின் பின்னணி என்ன, மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் அஜித்தால் எப்படி இயங்க முடிகிறது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் எழுகின்றன. ஆனால், அவை படத்துக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பெண் என்றாலே அடக்கமாக இருக்க வேண்டும், எதிர்த்துப் பேசக்கூடாது, நவீன ஆடைகளை அணிபவள் அந்த மாதிரிதான் இருப்பாள் அல்லது நடந்துகொள்வாள், தாமதமாக வீட்டுக்கு வருபவள் நல்லவள் அல்ல, சிரித்துப் பேசினால் அவள் எதற்கும் சம்மதிப்பாள், இரவில் தனியாக ஒரு ஆணை நம்பி வந்தால் அவனுடன் மது அருந்தினால் தப்பானவள்தான் என்று ஆண்கள் உள்ளிட்ட சமூகத்தில் இருக்கும் யாரும் நினைக்கும் பொதுப்புத்தியின் மீது மிகப்பெரிய கல்லை எறிந்து உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினோத்.

காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யின் நக்கலான பேச்சு, நீதிமன்றத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் வாதம், சில சாட்சிகளின் முன் முடிவுகள், ஊர் உலகுக்குத் தெரியாமல் லிவிங் டூ கெதரில் இருக்கும் ஒரு விரிவுரையாளர் இன்னொரு பெண்ணைக் குற்றம் சுமத்துவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆணவப் பேச்சு, பெண்ணுக்கு எதிராகவே சில பெண்கள் என்ன நடந்தது என்றே தெரியாமல் பொத்தாம் பொதுவாகப் பேசும் கிசுகிசு பாணியிலான விமர்சனங்கள் என்று சுற்றியிருப்பவர்களின் மனவோட்டத்தையும் வலுவாகக் காட்சிப்படுத்தியதில் இயக்குநரின் ஆளுமை பளிச்சிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அபலைப் பெண்ணாகவோ அல்லது ஏழைப் பெண்ணாகவோதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொதுப்புத்தியையும் சேர்த்தே இயக்குநர் உடைத்து எறிகிறார். பெண்கள் சொல்லும் நோ என்பது வெறும் வார்த்தையல்ல... வரி. வேணாம் என்றால் வேணாம் என்றுதான் அர்த்தம் என்பதே படத்தின் மையக் கரு. அதைக் கொஞ்சமும் சிதைக்காமல் நேர்மையாகப் பதிவு செய்த விதத்தில் 'நேர்கொண்ட பார்வை' நிமிர்ந்து நிற்கிறது.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்அஜித்எச்.வினோத்ஷ்ரத்தா ஸ்ரீநாத்நேர்கொண்ட பார்வைNerkondapaarvaiNerkonda paarvai review

You May Like

More From This Category

More From this Author