

சந்திப்பு: கா.இசக்கிமுத்து
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகை. எந்தவொரு கேள்விக்கும் தயக்கமின்றி பதிலள்ளித் தருபவர். கோபப்பட வைக்கும் கேள்விகளுக்குக் கூட கண்களால் சிரித்து சமநிலை கொள்வார். அவர்தான் காஜல் அகர்வால். அவருடன் ஓர் இனிய உரையாடல்:
ஒரு படத்துக்கான கதையை எதன் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறீர்கள்?
எப்போதும் படத்தின் கதையை முக்கியமானதாக கருதுபவள் நான். எனது கதாபாத்திரம் இந்தக் கதையில் என்ன செய்கிறது? எதைப் பற்றிய படம் இது? அதில் என்ன வித்தியாசமாக உள்ளதென்று பார்ப்பேன். முன்பைவிட இப்போது என் தேர்வில் இன்னும்கூட சுதந்திரமாக சுலபமாக என்னால் செயல்பட முடிகிறது என்பதை உணர்கிறேன்.
’இந்தியன் 2’ படப்பிடிப்பு எப்போது?
இப்படத்துக்காக களரி பயிற்சியைத் தொடர வேண்டும். குதிரை ஏற்றமும் கற்று வருகிறேன். ’இந்தியன் 2’-வுக்காக செப்டம்பரில் என் பகுதி படப்பிடிப்பு இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இதில் நான் ஒரு வித்தியாச மான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
விஷ்ணு மஞ்சுவின் படம் மூலம் ஹாலிவுட்டிலும் நுழையப் போகிறீர்கள்? அதைப் பற்றி..?
அது ஹாலிவுட் படமாக இருந்தாலும் நிறைய இந்தியத்தன்மை அதில் இருக்கும். சர்வதேச அளவில் எல்லோரையும் சென்றடையும். சகோதரர்களுக்குள் நடக்கும் இந்தக் கதை நிஜமாக நடந்தது. இந்தப் படம் மாண்டரின், காண்டனீஸ், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை திரை விழாக்களுக்கு எடுத்துச் செல்லவும் உள்ளனர். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த கலைஞர்களுடன் ஒன்றாக வேலை செய்தது மிகவும் வித்தியாசமான அனுபவம்.
வெவ்வேறு விதமான கலைஞர்களுடன் நடித்ததில் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
இந்திய நடிகர்கள் அவரவர்களும் சவுகரியமான சூழலில் இங்கு இருக்கிறோம். அப்படித்தான் நானும் இருக்கிறேன். ஆனால் நான் சந்தித்த அந்தக் கலைஞர்கள் அப்படியில்லை. அவர்கள் எளிதில் ஒரு காட்சியில் திருப்தி அடைவது கிடையாது. ஒரே விஷயத்தை நூறு முறை செய்ய வைப்பார்கள். எனது நடிப்பு வாழ்க்கையை முதலில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பதைப் போல இருந்தது. எனக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.
இதுவரையில் கற்றுக்கொண்டதை எல்லாம் மறந்து விட்டு, புதிதாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலை. தெலுங்கு, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் நான் இருப்பதால் நிறைய விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டியிருந்தது. முதல் சில டேக்குகளில் நான் நடிப் பதுதான் நல்ல நடிப்பு என்று முன்பெல்லாம் நினைப்பேன். அதற்கு மேல் போனால் இயந்திரத்தனமான நிலை யாக கருதுவேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது அப்படி ஒரு நினைப்பு வரவே கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்.
இனி, எதிர்காலத்தில் தேசிய அளவில் எல்லோராலும் ரசிக்கும்படியான படங் களில்தான் நடிப்பீர்களா?
எதிர்காலத்தில் அல்ல. நிகழ்காலத் திலும் இதுதான் நிலைமை. எல்லோ ருமே அப்படி படம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். மாநில மொழிகள் என்கிற வரையறைகளை, எல்லைகளை எல் லாம் சினிமா தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன். இணையத்தின் வளர்ச்சி யால் எல்லோரும் எல்லாவற்றையும் பார்க் கின்றனர். ஒரு படத்தின் கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் மொழி இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சத்தீஸ்கரில்கூட என் படம் பார்த்து பாராட்டுபவர்கள் இருக் கிறார்கள்.