

விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவரும் இந்தப் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதனை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'கைதி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையே, விஜய் படத்தின் முதற்கட்டப் பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா என பலரின் பெயர்கள் இதில் விஜய்க்கு நாயகியாகலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன், அந்த தருணத்தில் கியாரா அத்வானி வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் தேதிகள் இருந்தால் அவர் நாயகியாக ஒப்பந்தமாவார் எனத் தெரிகிறது.
ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளனர். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கி, ஜனவரி 2020-க்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.