

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கும்போது அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்று நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஒரே நேரத்தில் திரைப்படமாக்குகின்றனர். ஏ.எல்.விஜய் 'தலைவி' என்ற பெயரில் தனது படத்தை ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் கவுதம் மேனனும் ஜெயலலிதா பற்றிய வெப் சீரிஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினியும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'தி அயர்ன் லேடி' என்ற தலைப்பில் படமாக எடுக்கிறார். இதில் 'ஓ காதல் கண்மணி', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அறிவிப்பு வந்த பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.
இதுகுறித்து நித்யா மேனனிடம் சமீபத்தில் கேட்கப்பட்டபோது, "படக்குழு நிறைய முயற்சிகள் செய்து வருகிறது. இந்தப் பெயரை மட்டுமே வைத்து லாபம் பார்ப்பதை இயக்குநர் பிரியதர்ஷினி விரும்பவில்லை. செய்வதை நியாயமாக செய்ய விரும்புகிறோம். அதனால் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று எதிலும் சமரசம் செய்ய விரும்பவில்லை. முன் தயாரிப்பு வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்" என்று கூறியுள்ளார்.
தற்போது நித்யா மேனன் மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது முதல் படமான 'மிஷன் மங்கள்', ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுள்ளது.