என்னைப் பாதித்த விஷயங்களை படமாகக் கொடுக்கிறேன்: ஜெயம் ரவி

'கோமாளி' பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி.
'கோமாளி' பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி.
Updated on
1 min read

என்னைப் பாதித்த விஷயங்களை படமாகக் கொடுக்கிறேன் என்று 'கோமாளி' பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் ஜெயம் ரவி

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. 

நேற்று (ஆகஸ்ட் 3) மாலை ட்ரெய்லரை இணையத்தில் வெளியிட்டுவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தவிர்த்து மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் ஜெயம் ரவி பேசும் போது, “'கோமாளி' படத்தை ஏன் தேர்வு செய்தேன் என்றால், எனக்கு ரொம்ப தேவையான படமாகத் தோன்றியது. 'அடங்கமறு' படத்துக்கும் இதையே தான் சொன்னேன். 'கோமாளி' பார்த்துவிட்டு ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

எங்கு இருந்தோம், இப்போது எங்கு போய்க்கொண்டிருக்கிறோம், தற்சமயம் எங்கு இருக்கிறோம் என்பது தான் படம். இன்னுமொரு 10 ஆண்டுகள் கழித்து இந்தப் படதை எடுக்கவே முடியாது. இது தான் சரியான நேரமாக எனக்குப் பட்டது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை விற்கப் போகிறோம் என்றால் சிரித்திருப்பார்கள். ஆனால், இப்போது பல கம்பெனிகள் தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். முன்பு நாங்கள் விளையாடிவிட்டு, டேப்பைத் திறந்து எங்கு வேண்டுமானாலும் தண்ணீர் குடிக்கலாம். இப்போது எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.  

தொழில்நுட்பம், லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட அனைத்திலுமே நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதை எல்லாவற்றையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். ஆகையால் தான் இந்தப் படம் இப்போது தேவை என்று சொல்கிறேன். இந்த ட்ரெய்லரில் உள்ள காமெடி எல்லாம் தாண்டி மனிதம் எவ்வளவு முக்கியம் என்றும் சொல்லியிருக்கிறோம்.

பலரும் என்னிடம் சமுதாயக் கருத்துள்ள படங்களாக பண்ணுகிறீர்களே. அதுவாக வருகிறதா.. இல்லை தேடுகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இதுவரை மழுப்பலாகவே பதிலளித்துள்ளேன். இந்த மேடையில் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். 100% சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. அந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் என்று தான் ஆசையாகவும் இருக்கிறது. இந்த மண்ணில் பிறந்த அனைவருக்குமே அந்தப் பொறுப்பு இருக்கிறது. 

எனக்கு மைக்கில் பேசுவது அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு பிரச்சினையை மைக்கில் பேசுவது சுத்தமாகப் பிடிக்காது. ஆகையால் அதைப் படத்தில் பேசுகிறேன். எனக்கு சமுதாயப் பிரச்சினைகளைப் படத்தில் பேசுவது தான் பிடிக்கும். என்னைப் பாதித்த விஷயங்களை படமாகக் கொடுக்கிறேன். அதைப் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். பிடிக்கவில்லையா பொழுதுபோக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்” என்று பேசினார் ஜெயம் ரவி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in