

'கோமாளி' ட்ரெய்லரில் வரும் இறுதிக் காட்சி, ரஜினியைக் கிண்டல் செய்வது போல் இருப்பதால் அவரது ரசிகர்கள் படக்குழுவினரைக் கடுமையாக சாடி வருகிறார்கள்.
ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவியின் கெட்டப்கள், பாடல் வரிகள் என இந்தப் படத்துக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
16 ஆண்டுகள் கோமாவிலிருந்து விட்டு, எழுந்திருக்கும் ஒருவரின் நிலை என்ன, இந்த உலகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அவர் எப்படிப் பார்க்கிறார் என இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருப்பது ட்ரெய்லரில் தெரிந்தது.
ஆனால், அந்த ட்ரெய்லரில் இறுதியில் ஜெயம் ரவி, யோகி பாபுவிடம் 'இது எந்த வருடம்' என்று கேட்பார். அதற்கு '2016. நம்பவில்லை என்றால் இதைப் பார்' என்று தொலைக்காட்சியை ஆன் பண்ணுவார். அதில் ரஜினி ரசிகர்களைச் சந்திக்கும் போது அரசியலுக்கு வருவது குறித்து பேசியது ஒளிபரப்பாகும். அப்போது ஜெயம் ரவி "ஹெய்... இது 96. யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்" என்று பேசியிருப்பார்.
இந்தக் காட்சி வருடக்கணக்காக ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார் என்ற ரீதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தாலும், ரஜினி ரசிகர்கள் 'கோமாளி' படக்குழுவினரைக் கடுமையாக சாடி வருகிறார்கள். பலரும் #BoycottComali என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 3) மாலை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர். அப்போது இயக்குநர் ப்ரதீப் பேசும் போது, “நான் பயங்கர ரஜினி சார் ரசிகன். 'லிங்கா' படத்தின் போது பால் அபிஷேகம் எல்லாம் பண்ணியிருக்கேன். ரஜினி சார் சீக்கிரம் அரசியலுக்கு வரணும் என்பதாலேயே இந்தக் காட்சியை வைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.