

விவசாய நிலங்களில் ஆடு கிடை போடும் ‘கீதாரி’ தொழில் செய் பவர் அழகு. ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க குடும்பத் தோடு வேறு இடத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு தலையாரியின் நிலத்தில் ஆடு கிடை போட்டபிறகு, அவர் பணம் தர மறுக்கிறார். இதனால் ஏற்படும் மோதலில், அழகுவையும், அவரது மகன் ஷமன்மித்ருவையும் (கதா நாயகன்) அடித்து, உதைத்து மாட்டுக் கொட்டகையில் கட்டிவைக்கிறார். அங்கு வரும் திருடர்கள் உதவியுடன் இருவரும் தப்பிக்கின்றனர். அதன் பிறகு, அந்த திருடர்களோடு மித்ரு வுக்கு நட்பு ஏற்படுகிறது. தவறான சகவாசத்தால் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிறார்.
இதற்கிடையே ஒரு பெரிய திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் 3 திருடர்களை யும் மித்ருவின் காதலியான சத்யகலா காட்டிக்கொடுத்து, சிறைக்கு அனுப்பு கிறார். இதனால், மூவரும் அவரை பழிவாங்க தீர்மானிக்கின்றனர். சிறை யில் இருந்து அவர்கள் வந்ததும் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.
1980-களில் நடக்கும் ஒரு கதையை கிராமிய அழகியலோடும், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலோடும் வலுவான காட்சி அமைப்புகளோடு தந்திருக்கும் இயக்குநர் பி.மாரிமுத்து வுக்கு பூங்கொத்து. இந்த தலைமுறை யினர் கொஞ்சமும் அறிந்திராத கீதாரி களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். காலகட் டத்தை காட்டுவதற்காக, கலை இயக் கத்தையோ, ஆடை அணிகளையோ நம்பாமல், கீதாரிகளின் பழக்க வழக் கங்களை கதையுடன் சேர்ந்துவரும் படி அழகாக காட்சிகளில் பொருத்தி தந்திருக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் ஷமன் மித்ருதான் படத்தின் நாயகன். கதா பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்து கிறார். பாசக்கார பிள்ளையாக, கள வாணிகளின் நண்பனாக, மனைவியை சுற்றிவரும் இனிய காதலனாக, ஆக்ரோஷம் காட்டும் கணவனாக கவர்கிறார்.
‘தொரட்டி’ என்பது நாயகனைக் குறியீடாக உணர்த்தினாலும், நாயகி சத்யகலாவுக்குதான் பிரதான கதா பாத்திரம். ‘பத்து ஆள் வேலையை ஒரு ஆளாக’ச் செய்யும் உழைப்பும், தன்னம்பிக்கையும் மிக்கதாக படைக் கப்பட்டுள்ளது அந்த கதாபாத்திரம்.
அசல் கிராமத்துப் பெண்ணாக அவரது துடுக்குத்தனம் ரசிக்க வைக் கிறது. காதல், ஊடல், மோதல் என ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்குகிறார்.
நீண்ட காலமாக சினிமாவில் இருக் கும் அழகுக்கு இப்படம் ஒரு மைல் கல். பாசம் காட்டும் அப்பாவாக வாழ்ந் திருக்கிறார்.
திருடராக வரும் 3 பேரும் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக, வாய் பேச முடியாதவராக வரும் முக்கிய வில்லன், உடல் மொழியால் மிரட்டுகிறார்.
ஒருசில தெரிந்த முகங்கள் தவிர்த்து, பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. ஆனால் கதாபாத்திரங்களை வலுவா கப் படைத்திருப்பதால் நட்சத்திரங் களின் அவசியமின்றி படம் மிகுந்த பிடிமானத்துடன் நகர்கிறது.
தென் மாவட்டத்தின் வட்டார வழக்கை அச்சு பிசகாமல் காட்சிப் படுத்தியது படத்துக்கு பலம். தவறான சேர்க்கை ஒரு மனிதனை என்ன ஆக்குகிறது என்பதையும் பாடமாகச் சொல்கிறது படம்.
கதையில் திருப்பங்களை ஏற் படுத்தும் காட்சிகள் மிகுந்த படைப் பூக்கத்துடன் சித்தரிக்கப்பட்டுள் ளன. பெண் கேட்டுச் சென்று அழகு ஏமாற்றத்துடன் திரும்ப, நாயகி இடைப்பட்டு மனதொடிந்து நிற்கும் அவரை உயிர்ப்பித்து அனுப்பும் காட்சி அருமை.
முதல் பாகத்தில் ஒரு கீதாரி குடும் பத்தின் சூழல், உழைப்பு, நட்பு, காதல் என அனைத்தும் கலகலப்பாகவே நகர்கின்றன. 2-ம் பாதியில் திரு மணம், துரோகம், வஞ்சகம் எனக் காட்சிகள் இறுக்கமாகிவிடுகின்றன. இரண்டுக்கும் இடையே சலிப்பு வராமல் மண் சார்ந்த காட்சிகள் ஓரளவு தாங்கிப் பிடிக்கின்றன. ஆனாலும், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இல்லாதது சற்று அயர்ச்சியை ஏற் படுத்துகிறது.
வேத் சங்கரின் இசையில் ‘சவுக் காரம்’, ‘குள்ளநரிக் கூட்டம்’ ஆகிய பாடல்கள் வருடுகின்றன. ஒரு பொட்டல் கிராமத்தையும் உயிர்ப்போடு காட்சிப் படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர். வார்த்தை விளையாட்டுகள் இல்லாமல் வாழ்க்கையை மட்டுமே எடுத்துரைக்கின்றன சினேகனின் பாடல் வரிகள்.
வழக்கமான கிராமிய துயர காவியத்துக்கான ‘டெம்ப்ளேட்’ திரைக் கதை உத்திகளை தவிர்த்துவிட்டு, ஊகிக்க முடியாத திருப்பங்களை சேர்த்திருந்தால், ஓர் அசலான மண்வாசனைப் படம் கிடைத்திருக் கும்.