Published : 03 Aug 2019 18:02 pm

Updated : 03 Aug 2019 19:41 pm

 

Published : 03 Aug 2019 06:02 PM
Last Updated : 03 Aug 2019 07:41 PM

முதல் பார்வை: தொரட்டி 

thoratti-review

கிடை போட்டுப் பிழைக்கும் இளைஞனின் கூடா நட்பு அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைச் சொல்லியிருக்கும் படமே 'தொரட்டி'. 

ராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க அழகு தன் மனைவி, மகனுடன் ஒரு கிராமத்துக்கு வருகிறார். ஆடுகளை வைத்துக் கிடை போடும் தொழிலைச் செய்து வரும் அவர் தன் மச்சானிடம் உதவி கேட்கிறார். ஊர் தலைவரின் சம்மதத்துடன் அவர் நிலத்தில் கிடை போட, அழகுவின் மகன் ஷமன் மித்ரு தடதடவென வேலைகளைச் செய்கிறார். கிடை போடும் மாமன் மகள் சத்யகலாவுக்கு மித்ருவைப் பிடித்துவிடுகிறது. இதனிடையே ஆட்டுக்குட்டியைக் களவாட முயலும் 3 பேரும் மித்ருவைத் தாக்குகின்றனர். எந்த ஆட்டுக்குட்டியைத் தர மாட்டேன் என்று மறுக்கிறாரோ அதே ஆட்டுக்குட்டியை மது போதையில் கழுத்தறுத்துக் கொன்று அந்த 3 களவாணிகளுக்குக் கறி விருந்து படைக்கிறார். அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார். அந்தக் கூடா நட்பு மித்ருவுக்கு பல்வேறு சோதனைகளை ஏற்படுத்துகின்றன.  


திருமணம் முடிந்த கையோடு கணவன் வீட்டுக்குச் செல்லும் மணப்பெண்ணின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் களவாணிகள் 3 பேரும் வழிப்பறி செய்து பறிக்கின்றனர். இதனால் போலீஸில் சிக்கி சிறை தண்டனை அனுபவிக்கின்றனர். தண்டனை முடிந்து வெளியே வரும் 3 களவாணிகளும் சத்யகலாவைப் பழிவாங்கப் புறப்படுகின்றனர். அவர்கள் சத்யகலாவைக் கொல்ல முடிவெடுத்த காரணம் என்ன, மித்ரு களவாணிகளைப் புரிந்துகொண்டாரா, மித்ருவின் மனைவி சத்யகலா என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

1980களின் தொடக்கத்தில் கிடை போடும் தொழிலில் ஈடுபட்ட மனிதர்களின் வாழ்வியலை எந்த சமரசமும் இல்லாமல் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் மாரிமுத்து. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை வலுவாக காட்சிப்படுத்தியுள்ளார்.

மாயன் கதாபாத்திரத்தில் ஷமன் மித்ரு சரியாகப் பொருந்துகிறார். திருடர்களிடம் அடி வாங்குவது, அப்பாவை தலையாரி அடித்த பிறகும் திருப்பி அடிக்காமல் சாதுவாகவே இருப்பது, சத்யகலா மீதான காதலில் கிறங்குவது, போதையின் பாதையில் திரிவது, நல்லவர்களா கெட்டவர்களா என்ற எந்த ஆராய்ச்சிக்கும் செல்லாமல் திருடர்களுடன் பழகுவது, என்ன நடந்தாலும் அடிக்கடி ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்துச் சென்று கறி விருந்துக்குக் கொடுப்பது என வெள்ளந்தி மனிதரின் இயல்புகளைக் கண் முன் நிறுத்துகிறார். 

சத்யகலா தமிழ் சினிமாவின் நல்வரவு. கிராமத்துப் பெண்ணின் துடுக்குத்தனத்தையும் தைரிய குணத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார். அடம் பிடித்து மித்ருவைக் கட்டிக்கொள்ளும் அவர் கணவனிடம் மட்டும் கண்களால் பேசுவதும், களவாணிகளிடம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று உறுதியுடன் பேசுவதும் ரசனை. கணவன் மீதான கண்டிப்பையும் காதலையும் ஒருசேரக் காட்டும்போது தேர்ந்த நடிப்பால் மனதில் நிறைகிறார். 

அடியாள் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்த அழகு இதில் அன்பான அப்பாவின் உணர்வைக் கடத்துகிறார். 3 களவாணிகளும் கதாபாத்திரத்துக்கான தேவை உணர்ந்து நடித்துள்ளனர். 

குமார் ஸ்ரீதர் தென் மாவட்டத்தின் வறட்சியை, கிடை போடும் சூழலை அப்படியே அசலாகப் பதிவு செய்துள்ளார். வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் உயிரை உருக்குற பாடலும், சவக்காரம் பாடலும் ரசிக்க வைக்கின்றன. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசை படத்துக்குப் பலம் சேர்க்கிறது. 

எளிமையான கதை, நேர்த்தியான திரைக்கதையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் மாரிமுத்து. நகைச்சுவையைத் தள்ளி வைத்துவிட்டு அசல் வாழ்வை மட்டும் அப்படியே பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கிடை போடும் விதம், மேய்ச்சலுக்கு விடுவது, தொரட்டி வைத்துக் கொண்டு ஆடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, மண் வீடு உருவாக்கி குடியிருப்பது, திருமணச் சடங்கு முறை என ஒவ்வொன்றையும் ஆழமாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அசர வைக்கிறது. 

மாயன் கதாபாத்திரம் சூது வாதில்லாமல் இருந்தாலும் தன்னுடன் இருக்கும் களவாணி நண்பர்களை ரொம்ப நம்புவது படத்தின் பலவீனம். களவாணி நண்பர்களில் மூவரில் இருவர் மட்டுமே விபரீத செயலுக்குத் திட்டம் தீட்டுகின்றனர். தூங்குவது போல் நடிக்கும் ஒருவர் கடைசி வரை எதுவுமே செய்யாமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. 

வஞ்சகம், துரோகம், பாசம், வீரம், அன்பு என்று  கிராமத்து வாசத்தை வீச வைத்ததில் 'தொரட்டி' கவனிக்க வைக்கிறது. 

முதல் பார்வைதொரட்டி விமர்சனம்தொரட்டிமாரிமுத்துஷமன் மித்ருசத்யகலா

You May Like

More From This Category

More From this Author