

’துக்ளக் தர்பார்’ படப்பூஜைக்காக பட்டாசு வெடித்து விஜய் சேதுபதிக்கு வரவேற்பு அளித்தனர். அதற்கு தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் விஜய் சேதுபதி.
'சிந்துபாத்' படத்தைத் தொடர்ந்து 'சங்கத்தமிழன்', 'கடைசி விவசாயி', 'லாபம்', 'மாமனிதன்', ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் 'துக்ளக் தர்பார்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி.
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த விழாவுக்காக விஜய் சேதுபதி வரும் போது, அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக விழாவில் பேசும் போது விஜய் சேதுபதி “2010-ம் ஆண்டிலிருந்து இயக்குநர் தில்லி பிரசாத்தை தெரியும். ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துக்கு இவர் தான் நடிகர்கள் தேர்வு செய்யும் பொறுப்பிலிருந்தார். ரொம்ப புத்திசாலித்தனமான, பொறுமையான ஒரு மனிதர். அவர் யோசிப்பது எப்போதுமே புதுமையாக இருக்கும். இந்தக் கதைத் தான் தயாரிப்பாளருக்கும், எனக்கும் பிடித்திருந்தது.
'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு பார்த்திபன் சாருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. 4 நாட்களுக்கு முன்பு தான் பிரேம்குமார் சார் ஒளிப்பதிவாளர் என்றார்கள். ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு நெருக்கமானவர்கள் பலர் இந்தப் படத்தில் இணைந்திருப்பதில் சந்தோஷப்படுகிறேன். இந்த விழாவுக்கு நான் வரும் போது, யாரு பட்டாசு வெடிக்கணும் என்று ஐடியா கொடுத்தாங்களோ அவர்கள் மீது மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி