

விரைவில் பவன் கல்யாண் - சீமான் இருவரது சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரகாஷ்ராஜ் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதவன், பாவனா நடிப்பில் வெளியான படம் 'வாழ்த்துகள்'. 2008-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு சீமான் படம் எதுவும் இயக்கவில்லை. 'வாழ்த்துகள்' படத்துக்குப் பிறகு தீவிரமாக அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார். 'நாம் தமிழர் கட்சி' தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அனைத்திலும் சீமானின் கட்சி போட்டியிட்டது.
தற்போது தீவிரமான அரசியல் களத்துக்கு இடையே, மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார் சீமான். விஜய், ஜீவா உள்ளிட்ட பல நாயகர்களைச் சந்தித்து கதைச் சொல்லியிருப்பதாகவும், விரைவில் படம் துவங்குவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், எதுவுமே அடுத்தக்கட்டமாக ஒப்பந்தத்துக்குச் செல்லவில்லை.
'பகலவன்' என்ற கதையை நீண்ட நாட்களாக அவர் கையில் வைத்துள்ளார் என்பது தமிழ் திரையுலகினர் அனைவருக்குமே தெரியும். தற்போது சிம்புவிடம் கதையைச் சொல்லி, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக சீமானே பல அரசியல் மேடைகளில் பேசியுள்ளார். அந்தப் படம் தனக்கும், சிம்புவுக்கும் அடுத்த கட்டமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மாதம் பவன் கல்யாணைச் சந்திக்கவுள்ளார் சீமான். தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகராக இருக்கும் பவன் கல்யாண், அதிலிருந்து விலகி ஜனசேனா கட்சித் தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவருடைய கட்சியோ படுதோல்வியைச் சந்தித்தது. ஆனாலும், திரையுலகிற்கு திரும்ப மாட்டேன் என அரசியலிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த வேளையில் சீமான் - பவன் கல்யாண் சந்திப்பு நடைபெறவுள்ளது. இது படத்துக்காகவா அல்லது அரசியலுக்காகவா என்பது விரைவில் தெரியவரும். ஜூலை மாதமே இந்தச் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென்று முக்கியமான வேலை வந்ததால் தான் ஆகஸ்ட் மாதத்துக்கு சந்திப்பை ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பவன் கல்யாண் - சீமான் சந்திப்பை ஏற்பாடு செய்தவர் பிரகாஷ்ராஜ் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு நடைபெற்ற உடன் தான், எதனால் சந்தித்தார்கள் என்பதற்கான முழுமையான காரணம் தெரியவரும்.