

நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு வசூல் குறைவு என்று 'ஜாக்பாட்' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் ஜோதிகா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜாக்பாட்'. சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 2) வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாக எப்படி என்பது அடுத்த வாரத் தொடக்கத்தில் தெரியவரும்.
'ஜாக்பாட்' படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது 'யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஜோதிகா "அப்படி யாரும் மனதில் இல்லை. மேலும் இதுவரைக்கும் பயோபிக்கில் நடிக்க எந்தவொரு ஐடியாவும் இல்லை.
மற்றபடி பல இளம் இயக்குநர்கள் எனக்காகவே சில கதைகளை எழுதுகிறார்கள். அதுவே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. பெண்கள் பற்றி இன்றைய இளம் இயக்குநர்கள் எழுதுவதே ரொம்ப அருமையான விஷயம். ஆனால் மக்கள் தான் நாயகியை மையப்படுத்தி வரும் படங்களுக்கு பெரிய வசூல் கிடைப்பதில்லை. அது தான் கஷ்டமாகவுள்ளது.
பெரிய நாயகர்கள் படமென்றால் போகிறார்கள். பெரிய நாயகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகளுக்கு 5 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் படங்களின் வியாபாரம் அந்த அளவுக்கு நடப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது. அதே போன்றதொரு வியாபாரம் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் நடந்தால் அது சாத்தியமாகும்.
அதே போல், முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெண்களை மையப்படுத்திய படங்களுக்கும் இசையமைக்க வேண்டும். அப்போது தான் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் அந்த எண்ணம் வரும்” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.
'ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து 'பொன்மகள் வந்தாள்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஜோதிகா. புதுமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ள இந்தப் படத்தில் பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் ஜோதிகாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.