பாராட்டிய அஜித்: ரீ-டேக் கேட்ட இயக்குநர்; திகைத்த பாண்டே! - 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் ஒரு சுவாரசிய நிகழ்வு

பாராட்டிய அஜித்: ரீ-டேக் கேட்ட இயக்குநர்; திகைத்த பாண்டே! - 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் ஒரு சுவாரசிய நிகழ்வு
Updated on
1 min read

'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் ரங்கராஜ் பாண்டேவின் நீண்ட வசன நடிப்புக்கு அஜித் உள்ளிட்டோர் பாராட்டிய போதும், இயக்குநர் வினோத் ரீ-டேக் கேட்டதால் மீண்டும் வசனம் பேசினார் பாண்டே.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும்.

ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை போனி கபூர் நேற்று (ஆகஸ்ட் 1) சென்னையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார். இதில் அர்ஜுன் கபூர், அருண் விஜய், புகைப்பட நிபுணர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பார்த்துள்ளனர்.

இந்த தருணத்தில் ’நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். சென்னையில் அஜித் படப்பிடிப்பு என்றால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்று, முழுபடப்பிடிப்புமே ஹைதராபாத்திலேயே நடித்தியது படக்குழு.

படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சிக்காக, படப்பிடிப்பு தளமே பரபரப்பாக பணிபுரிந்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்தக் காட்சியின்படி நீதிபதியைப் பார்த்து ரங்கராஜ் பாண்டே மிக நீளமான வசனம் பேசி நடிக்க வேண்டும். இதற்காக ரங்கராஜ் பாண்டேவும் தனது வசனத்தை ரொம்பவே மனப்பாடம் செய்து தயாராக வந்தார்.

படக்குழுவோ நீளமான வசனமாச்சே, எப்படி ரங்கராஜ் பாண்டே பேசப் போகிறார் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரே டேக்கில், ஒட்டுமொத்த வசனத்தை சரியாக பேசிமுடித்திருக்கிறார் பாண்டே.  அதைக்கண்டு அஜித் தொடங்கி படக்குழுவில் உள்ள அனைவருமே, ரங்கராஜ் பாண்டேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரொம்ப சூப்பரா பண்ணிட்டீங்க என்று பலரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த தருணத்தில் தான் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அனைவரும் பாராட்டி முடித்தவுடன் இயக்குநர் ஹெச்.வினோத் சாதாரணமாக  'ரீ-டேக்' என்று சொல்லியிருக்கிறார். 

இதைக்கேட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்குமே பயங்கரமான ஷாக். என்ன தப்பு பண்ணினேன்.  இவ்வளவு பேர் பாராட்டும் அளவுக்குப் பேசி நடித்தப்பின்னர் ரீ-டேக்கா? என்று கொஞ்சம் டென்ஷனும் ஆகிட்டார் ரங்கராஜ் பாண்டே. ஏன் இன்னொரு டேக் என்று சிலர் நேரடியாகவே இயக்குநர் வினோத்திடம் கேட்டுவிட்டார்கள். 

இதற்கு பதிலளித்த இயக்குனர் ஹெச்.வினோத்.,  "ரங்கராஜ் பாண்டே வசனம் எல்லாம் சூப்பரா பேசிட்டார். ஆனால், முக்கியமான வசனங்கள் பேசுகிற இடங்களில் எல்லாம் கண்ணைச் சிமிட்டிவிட்டார். இதை மானிட்டரில் பார்த்தால் தான் தெரியும்" என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு மானிட்டரைப் பார்க்கும் போது ரங்கராஜ் பாண்டே கண் சிமிட்டிருப்பது தெரிந்திருக்கிறது. உடனே, வெவ்வேறு கோணங்களில் அந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in