Published : 01 Aug 2019 03:40 PM
Last Updated : 01 Aug 2019 03:40 PM

ரஜினி, விஜய் குறித்த பேச்சால் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த ராஜுமுருகன்

ரஜினி, விஜய் குறித்த பேச்சால் சர்ச்சையானதைத் தொடர்ந்து, வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜுமுருகன். 

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முந்திரிக்காடு'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், இயக்குநர் ராஜுமுருகன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும் போது, “இந்தப் படத்தில் நாயகன் புகழ் எங்கப் பிள்ளை. சீமான் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி எல்லாம் இருக்கும் போது நம்ம பிள்ளைக்கு ஒரு பட்டம் வைத்துவிடுங்கள். ஒரு இடதுசாரி தகப்பன் வளர்க்கும் பிள்ளை எப்படியிருப்பான் என்பதற்கு புகழ் ஒரு உதாரணம். அவன் திரைப்படத்தை மிகத்தீவிரமாக நேசிக்கக் கூடியவன். நிச்சயம் புகழ்மிக்க நடிகனாக அவன் மாறுவான்” என்று பேசினார் இயக்குநர் ராஜுமுருகன்.

இந்தப் பேச்சால் சர்ச்சையில் சிக்கினார் இயக்குநர் ராஜுமுருகன், ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து இயக்குநர் ராஜுமுருகனை கடுமையாக சாடினார்கள். அவரது பேச்சு அடங்கிய சிறு வீடியோவை ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டு காட்டமாக ட்வீட் செய்தனர்.

இது தொடர்பாக பலரும் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து இயக்குநர் ராஜுமுருகன் தனது ட்விட்டர் பதிவில், “ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன். 

ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிவாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார் ராஜுமுருகன். இந்த ட்வீட்டின் மூலம் சமூகவலைதளத்தில் நிலவி வந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x