புலியில் 2200 கிராபிக்ஸ் ஷாட்கள்: கமலக்கண்ணன் கூறிய ரகசியங்கள்
விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தில் 2200 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருப்பதாக அப்படத்தின் கிராபிக்ஸ் வல்லுநர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ராஜமெளலி இயக்கிய 'மகாதீரா', 'நான் ஈ' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் மேற்பார்வையாளராக பணியாற்றி இருக்கிறார். 'மகாதீரா', 'நான் ஈ' ஆகிய படங்களின் பணிகளுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார் கமலக்கண்ணன்
'புலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன் 'புலி' படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வை கலைஞர் கமலக்கண்ணிடம் பேசியதில் இருந்து..
"விஜய் நடித்த 'குஷி' படத்தின் "ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்" என்ற பாடலுக்காக கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றி இருக்கிறேன். அதற்கு பிறகு 'புலி' படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டது.
ராஜமெளலியோடு 'சை' படத்திலிருந்து 'நான் ஈ' வரை பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கு கிராபிக்ஸ் ஷாட்ஸ் அதிகரித்துக் கொண்டே வந்தார். 'மகாதீரா' மற்றும் 'நான் ஈ' படம் வெளியான உடனும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றன. ப்ளூ-ரேவுக்கு மெருக்கேற்றப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் அளித்தேன்.
'நான் ஈ' படத்துக்கு 1200 ஷாட்களும், 'மகாதீரா' படத்துக்கு 1700 ஷாட்களும் கிராபிக்ஸ் பண்ணியிருந்தேன். 'புலி' படத்துக்கு 2200 ஷாட்கள் கிராபிக்ஸ் பண்ணியிருக்கிறோம். நான் பணியாற்றிய படங்களில் அதிகமான கிராபிக்ஸ் ஷாட்ஸ் உள்ள படம் 'புலி'. சிம்புதேவன் முதலில் 2700 ஷாட்ஸ் கொடுத்தார், அதிலிருந்து 2200 ஷாட்களாக குறைத்தோம்.
இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகள் ரஷ்யா, உக்ரைன், பல்கேரியா, சுவீடன், சென்னை, பெங்களூர் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில் முக்கியமான காட்சிகளுக்கு எல்லாம் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் வெளியீட்டுக்கு பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன்
