

அன்பை பரப்புங்கள் என்று தன் ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (ஜூலை 28) தனுஷ் தனது 36-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடந்தது. மேலும், திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைதளத்தில் தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தனுஷ் ரசிகர்களுக்காக சென்னையிலுள்ள காசி திரையரங்கில் 'பொல்லாதவன்' படம் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தனுஷ் ரசிகர்களுடன் படத்தை கண்டுகழித்தார்.
தன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என வாழ்த்துமழை குவிந்ததை முன்னிட்டு தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. நேற்று என் பிறந்தநாள் அன்று என் மீது நீங்கள் எல்லாம் பொழிந்த அன்பு திக்குமுக்காடச் செய்தது.
எனது ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை மிகவும் விசேஷமாக உணரவைத்துவிட்டீர்கள். என் மீது நீங்கள் காட்டும் நிபந்தனையில்லா அன்பிலிருந்து நிறைய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெறுகிறேன். எனது வலிமையின் தூண்களுக்கு என் அன்பு. அன்பை பரப்புங்கள்" என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.