

'பொன்னியின் செல்வன்' படத்தில் தன் பங்களிப்பு என்ன என்று இயக்குநர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மணிரத்னம். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
தற்போது இந்தப் படத்தில் பணியாற்றவுள்ளதாக இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், அந்தப் பதிவுடன் மணிரத்னத்துடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்த ட்வீட்டை வைத்து பலரும் நடிக்கவுள்ளார், வசனம் எழுதவுள்ளார் என்றெல்லாம் செய்திகளைப் பரப்பினார்கள்.
இது தொடர்பாக பார்த்திபனிடம் கேட்ட போது, “‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகனாக பொறுப்பேற்கிறேன். பங்களிப்பு என்றதும் சிலர் எழுத்து வேலைகளிலுமா? என்று கேட்கின்றனர். இல்லை. நடிகனாக மட்டுமே உள்ளே செல்கிறேன்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அரசனாக நடித்த பிறகுதான், அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த படத்தில் என் பகுதி படப்பிடிப்பு ஜனவரியில்தான் என்பதால் மற்ற விஷயங்களை இப்போதே கூறமுடியாது. இதற்கிடையே விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்திலும், ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும் நடிப்பு வேலைகளைத் தொடங்குகிறேன். எனது ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் சிங்கப்பூர் திரைப்பட விழாவிலும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார் பார்த்திபன்.