

'தர்பார்' படப்பிடிப்பு முடிந்தவுடன் இமயமலைக்கு பயணிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறைப் பின்னணியில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி, நயன்தாரா கூட்டணியில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை மும்பையிலேயே படமாக்கிவிட்டது படக்குழு.
ப்ரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ரஜினியின் லுக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதனிடையே சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார்.
தற்போது மும்பையில் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார். மழை, பனி உள்ளிட்ட தட்பவெப்ப சூழலை கணக்கிட்டு, அதற்கேற்ப செப்டம்பரில் இமயமலைக்கு செல்ல உள்ளார்.