

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு 'பட்டாஸ்' எனப் பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'அசுரன்' படத்துக்கு முன்பாகவே, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் தனுஷ். சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியது.
இரண்டு வேடங்கள் என்பதால், முதல் வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தான் 'அசுரன்' படத்தில் நடித்தார் தனுஷ். அதை முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது, துரை.செந்தில்குமார் படத்தின் மற்றொரு கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
நேற்று (ஜூலை 28) தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு துரை.செந்தில்குமார் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 'பட்டாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிநேகா, மெஹ்ரீன், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடிக்க உள்ளனர்.
'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' படங்களின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்பராஜ் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை ஓய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது.