ஜோவிடம் கற்றுக்கொள்ளும் விஷயம்: மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சூர்யா

’ஜாக்பாட்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா
’ஜாக்பாட்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா
Updated on
1 min read

ஜோவிடமிருந்து மறுபடியும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று 'ஜாக்பாட்' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜாக்பாட்'. சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இணைந்து சூர்யா, சிவகுமார், ஜோதிகாவின் தாயார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சூர்யா பேசும் போது, ''என்னோட ஜோ... என்னோட ஜாக்பாட். 100% அல்ல 200% எவ்வித காம்பரமைஸும் பண்ணாமல் இருப்பவர் அம்மா ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகிற்கு வந்தார். அப்போது தன் முடிவுகள் அனைத்தையுமே பல முறை யோசித்து எடுக்கும் முடிவுகள். அவருடைய இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால், அது முடியவே முடியாது. 

சமூகம், பெண்கள் சார்ந்து அவர் உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட அனுபவம் எனக்கில்லை என்று தான் சொல்வேன். தமிழ்நாட்டுப் பெண்கள் பற்றிக் கூட. 'ராட்சசி' படத்துக்கு வந்த கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. அதைப் போலவே இந்தப் படம் பண்ணியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இது முடியும், இது முடியாது என்ற ஒன்றே கிடையாது. இந்தப் படம் கூட தொடர்ச்சியாக ஷூட் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். நான் தான் பல முறை, ஏன் இவ்வளவு வேகம். இன்னும் கொஞ்சம் நாட்கள் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்று மெதுவாக பண்ணச் சொல்லியிருக்கேன். 

ஜோ இந்தப் படத்தில் பண்ணியிருக்கும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளைப் பார்த்துவிட்டு, எப்படி பண்ணினார் என்ற ஆச்சர்யமே இருந்தது. நான் தினமும் ஜிம்முக்குப் போகிறேன், வொர்க் அவுட் பண்றேன் எனக்கு ஓ.கே. ஆனால் தியா - தேவ் இருவருக்கும் ஹோம் ஒர்க், குளிக்க வைப்பது, சாப்பிட வைப்பது என அனைத்து வேலையையும் பண்ணிவிட்டு போவார். 3 மணி நேரம் நடனப் பயிற்சி,  2 மணி நேரம் சிலம்பப் பயிற்சி என கற்றுக் கொண்டார்.

என்னோட தொழிலில் நான் இன்னும் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை ஜோவிடமிருந்து மறுபடியும் கற்றுக் கொண்டிருக்கிறேன். பசங்க 6 மணிக்கு எழுந்து பள்ளிக்குக் கிளம்ப வேண்டும் என்றால், 5 மணிக்கு எழுந்து அன்றைய வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார். அதைப் பார்த்து சுதா கொங்கரா படத்துக்கு நான் வசனத்தை மனப்பாடம் செய்து போய்க்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இன்னும் நம்மால் நன்றாக நடிக்க முடியும் என்பதுதான் காரணம்” என்று பேசினார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in