

'பிகில்' பாடல்கள் லீக்கானது தொடர்பாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், படக்குழுவினருக்கும் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து பூசணிக்காய் உடைக்க தீர்மானித்துள்ளனர்.
நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் விஜய் நடித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்புத் தள புகைப்படம் லீக், பாடல்கள் லீக் என தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கியது படக்குழு. அதிலும் 'சிங்கப்பெண்ணே' என்ற முக்கியமான பாடல் இணையத்தில் கசிந்ததால் படக்குழு மிகவும் அதிர்ச்சியானது.
தீபாவளி அன்றுதான் பட வெளியீடு என்றாலும், உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து அந்தப் பாடல் உருவான விதத்தை ஷுட் செய்து இணையத்தில் 'சிங்கப்பெண்ணே' பாடலை வெளியிட்டது படக்குழு. ஆனால் பாடல் வெளியானது பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. பாடல் எப்படி வெளியானது என்பதை அறிய சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையைத் போலீஸார் தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவு என்ன என்பது விரைவில் தெரிய வரும்.
கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் லீக்கான போது, மொபைல் போன் படப்பிடிப்பு தளத்துக்குள் அனுமதியில்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன்தான் படப்பிடிப்பு நடந்தது. தற்போது பாடல்கள் லீக்கானவுடன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பாடல்கள் பரிமாற்றம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் பரிமாற்றம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட அனைத்தையுமே தனியார் காவல் அதிகாரிகள் கொண்ட காரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இனிமேல் எந்த வகையில், எந்தவொரு விஷயமும் வெளியாகக்கூடாது என்று படக்குழுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள் வெளியானபோதுகூட, சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.