Published : 27 Jul 2019 11:03 AM
Last Updated : 27 Jul 2019 11:03 AM

நெருங்கும் ஆகஸ்ட் 8: தொடரும் 'நேர்கொண்ட பார்வை' விநியோகக் குளறுபடிகள்

ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கி வரும் நேரத்தில், 'நேர்கொண்ட பார்வை' பட விநியோக விவகாரத்தில் தற்போதுவரை குளறுபடிகள் தொடர்கின்றன.

போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைப் பணிகள் முடிந்து, தற்போது க்யூபுக்கு அனுப்பப்படும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் விநியோக உரிமையில் இன்னும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஒரு வேளை போனி கபூர் நேரடியாக வெளியிடவுள்ளாரா என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

மறுக்கப்பட்ட விநியோகம்
'நேர்கொண்ட பார்வை' படத்தின் விநியோக உரிமைப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டபோது, பலரும் உரிமையைக் கைப்பற்றப் போட்டியிட்டார்கள். ஆனால், போனி கபூர் சொன்ன விலையால் பின்வாங்கியதாகத் தெரிகிறது. 'விஸ்வாசம்' வியாபாரத்தை முன்வைத்து அவர் அதிக தொகை கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'கூர்கா' படத்தை வெளியிட்ட விப்ரா நிறுவனமும், 'நேர்கொண்ட பார்வை' விநியோக உரிமையைக் கைப்பற்றப் போட்டியிட்டது. ஆனால் முன்னணி நிறுவனமில்லை என்பதால் அவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை பல பேட்டிகளில் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

பேச்சுவார்த்தையில் ஜெமினி பிலிம் சர்க்யூட்

பல படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம், 'நேர்கொண்ட பார்வை' தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், அந்நிறுவனம் கைப்பற்றி வெளியிட முன்வரும் போது, அந்நிறுவனம் முன்பு தயாரித்து வெளியான படங்களின் நஷ்டத்தைச் சரி செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் நினைத்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினையால் தான் அந்நிறுவனம் தயாரிப்பில் விஷால் நடித்த 'மதகஜராஜா' படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

ஆனால், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனமோ ஆந்திராவில் உள்ள தங்களுடைய இடமொன்றை சமீபத்தில் விற்றுள்ளது. அதில் வந்துள்ள தொகையை வைத்து, தங்களது நிறுவனத்தைச் சுற்றியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 'நேர்கொண்ட பார்வை' உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு விட்டு, அடுத்ததாக 'மதகஜராஜா' படத்தையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

விநியோகஸ்தர்கள் தடுமாற்றம்

தமிழக உரிமை யாருக்கு என்று தெரியாததால், மதுரை - கோயம்புத்தூர்- நெல்லை போன்ற மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் தடுமாறி வருகிறார்கள். அந்தெந்த மாநில விநியோகம் தொடர்பாக யாரிடம் பேசுவது என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கி வரும் சமயத்தில், விரைவில் விநியோகப் பிரச்சினைகளை சரிசெய்து, 'நேர்கொண்ட பார்வை' தமிழக உரிமை யாருக்கு என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x