நல்ல கதை தேடும் ரசிகர்கள்- நடிகை அன்யா சிங் நேர்காணல்

நல்ல கதை தேடும் ரசிகர்கள்- நடிகை அன்யா சிங் நேர்காணல்
Updated on
2 min read

கா.இசக்கிமுத்து

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாரான படம் ‘கண்ணாடி’. தெலுங்கு பதிப்பு (‘நின்னு வீடனி நீடனு நேனே’) சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், விரைவில் தமிழில் படத்தை வெளியிட முயற்சி நடந்து வருகிறது. இதில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக, நடித்திருப்பவர் அன்யா சிங். தெலுங்கில் கிடைத்த வெற்றி தமிழிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அன்யாவுடன் ஒரு நேர்காணல்..

‘கண்ணாடி’ வாய்ப்பு எப்படி அமைந்தது?

இந்தியில் நான் நடித்த முதல் படம் ‘கைதிபேண்டு’. இதை பார்த்துதான் இயக்குநர் கார்த்திக் ராஜு இந்த வாய்ப்பை வழங்கினார். திரில்லர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், இந்த கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டேன். தமிழ், தெலுங்கில் ஒரு நல்ல படம் மூலம் அறிமுகமாவது மகிழ்ச்சி.

‘கைதி பேண்டு’ படத்துக்கு பிறகு இந்தியில் ஏன் வேறு படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை?

அந்த படம் 2017 ஆகஸ்ட்டில்  வெளியானது. அக்டோபரில் என் தந்தை காலமாகிவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர எனக்கு சில காலம் ஆனது.

தமிழ் ரசிகர்கள் பற்றி..

பொதுவாக ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் எல்லா படங்களையும் பார்த்துவிடுவது இல்லை. நல்ல கதை இருக்கா, திரைக்கதை இருக்கா என்று தேடித் தேடித்தான் படம் பார்க்கிறார்கள். எனினும், தமிழ் ரசிகர்களை நான் இன்னும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே, அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். தமிழில் 2 வாய்ப்புகள் வந்துள்ளன. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. ஸ்ரீதேவி போல ஆகவேண்டும்.  எல்லா மொழி யிலும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

படப்பிடிப்பு தளத் தில் மொழிப் பிரச்சினை இருந்திருக்குமே, எப்படி சமாளித்தீர்கள்?

மொழி தெரியாதது பெரிய பிரச்சினைதான். முதலில் வசனங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து புரிந்துகொண்டேன். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தன்மை இருக்கிறது. வசனத்தை தந்தாலும்கூட, அதை எப்படி உச்சரிப்பது என்பது தெரியாது. நடித்துக் கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்து சொல்வார்கள். அதை கேட்க வேண்டும், சரியாகப் பேச வேண்டும், நடிக்கவும் வேண்டும். தவிர, ஒரே நேரத்தில் 2 மொழிகளில் எடுத்ததால், இரண்டும் சரியாக பிடிபடவில்லை. எனக்கு இந்தி தெரியும் என்பதால் தெலுங்கு ஓரளவு எளிதாக இருக்கிறது. தமிழ் கஷ்டம் என்றாலும், இனிமையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்க வேண்டும்.

தமிழ் படம் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?

இப்போது நிறைய ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டதால், இதர மொழி படங்கள் பார்க்கும் வசதி எளிதாகிவிட்டது. நான் பார்த்த ஒரே படம் பாகுபலி.. ஸாரி. அதுகூட இந்தியில்தான் பார்த்தேன். இனி நிறைய பார்ப்பேன்.

திரையுலகின் பொதுவான சிரமங்கள் என்ன?

மரியாதைக் குறைவு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என துரதிர்ஷ்டவசமாக, ஒரு பெண் இங்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஆனால், இதுபோல எது நடந்தாலும் கண்டிப்பாக நான் எதிர்த்து நிற்பேன். ‘மீ டூ’ போன்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்தும் போக்கும் மாற வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in