

ஜெயா பிளஸ் டிவியில் ‘ரீல் பெட்டி’ நிகழ்ச்சி மூலமாக சினிமா நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர் சுகன்யா மனோகர். இவரது தமிழ் உச்சரிப்பை பார்த்த இயக்குநர் கே.வி.ஆனந்த், தனது ‘காப்பான்’ படத்தில் இவரை செய்தி வாசிப்பாளராக நடிக்க வைத்திருக்கிறார்.
‘‘சினிமா, சின்னத்திரையில் கேமராவுக்கு பின்னால் இயங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கேற்ப, இதழியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தேன். குறும்படங்களும் இயக்கியுள்ளேன்.
இதற்கிடையே, தமிழ் உச்சரிப்புதான் என்னை செய்தி வாசிப்பாளர் ஆக்கியுள்ளது. என் விருப்பம் இல்லாமலேயே திரைக்கு முன்னால் முகம்காட்டத் தொடங்கினேன். அந்த அனுபவம் காரணமாக இன்று நெடுந்தொடர், வெப் சீரீஸ் என்று நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
நான் ஒரு புகைப்படக் கலைஞரும்கூட. நேரம் கிடைக்கும்போது புகைப்படக் கலையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தில் வானிலை நிலவரம் பற்றி செய்தி வாசிக்கும் பின்னணியில் நடித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் சுகன்யா.