

லாப விகிதப்படி இனி சம்பளம் எனச் சட்டம் போடுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஐடியா கொடுத்துள்ளார்.
2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்குப் பேரரசுவும் போட்டியின்றி தேர்வாகினர்.
இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 25) காலையில் நடைபெற்றது. இதில் முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தத் தேர்தலில் செயற்குழு உறுப்பினராக வெற்றிப் பெற்ற இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுயதாவது:
“இங்கு பேசும் போது விநியோகஸ்தர் அருள்பதி சார், புதிய படத்துக்குப் பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால் என்னுடைய எண்ணோட்டத்தின் படி அது தேவையில்லை என நினைக்கிறேன். தயாரிப்பாளர் சங்கம் கடுமையான சட்டம் போட வேண்டும்.
லாப விகிதப்படித்தான் இனி சம்பளம் என்று நீங்கள் சட்டம் போடுங்கள். அதற்கு ஒப்புக் கொள்கிறவர்களை வைத்து நாங்கள் உழைக்கிறோம். வேலைகளை நிறுத்திவிடுவதில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். தயவு செய்து ஸ்ட்ரைக் என்பது வேண்டாம்.
இயக்குநர் சங்கத்துக்கு ஒரு ஐடியா. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இயக்குநர் வெற்றிப்படம் கொடுத்தால், சங்கத்துக்கு ரூ.25000 கொடுக்க வேண்டும் என்று முன்பு இருந்தது.
அதில் நானும், பி.வாசுவும் மட்டும் தான் கொடுத்தோம் என நினைக்கிறேன். இப்போது பெரிய படங்கள் வருடத்துக்கு 50 வரை வருகிறது. அதை இயக்கும் இயக்குநர்கள் குறைந்தது 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் அதிலிருந்து 1 லட்ச ரூபாய் சங்கத்துக்குக் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய் வரை சங்கத்துக்கு வரும்.
அதை நாம் வைப்பு நிதியில் சேமித்துக் கொள்ளலாம். சின்னப் படங்களின் இயக்குநர்கள் 10 ஆயிரம், 5 ஆயிரம் என அவர்கள் விருப்பப்படி கொடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.