

டிஜிட்டல் முறை வந்தவுடன் யார் இயக்குநர், யார் தயாரிப்பாளர் என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்போது படம் இயக்குவது தொழிலாக அல்லாமல் பம்மாத்து வேலையாக உள்ளது என இயக்குநர் சங்கத் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்வில், கடுமையாகப் பேசினார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்குப் பேரரசுவும் போட்டியின்றி தேர்வாகினர்.
இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் விழா சென்னையில் இன்று (ஜூலை 25) காலையில் நடைபெற்றது. இதில் முன்னணி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தலைவர் பதவிக்குப் பொறுப்பேற்ற ஆர்.கே.செல்வமணி பேசும் போது, “புதிய நிர்வாகிகளாக எங்களைத் தேர்வு செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இயக்குநர் விக்ரமனுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் ஒரு சிறந்த நிர்வாகி, நண்பர் மற்றும் இயக்குநர். படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமே சர்வதிகாரியாக இருப்பார். மீதி இடங்களில் சாதாரண மனிதராக இருப்பார்.
தயாரிப்பாளர்களின் இயக்குநர், தயாரிப்பாளர்களின் மேனேஜர், தயாரிப்பாளர்களின் தொழில்நுட்பக் கலைஞர் என்று எப்போது அமைகிறதோ, அது தான் தமிழ் சினிமாவின் பொற்காலமாக அமையும். தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருப்பதற்கு நாங்கள் தயார். அதற்கு என்ன வேண்டுமோ செய்து தர தயாராக இருக்கிறோம்.
தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். இயக்குநர்களை ஒப்பந்தம் செய்யும் போது, என்ன சம்பளம் உள்ளிட்டவற்றை ஒரு அக்ரிமென்ட் போட்டுக் கொடுத்துவிடுங்கள். இதர உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கம் வழியாக சம்பளம் பெற்றுத்தர உறுதி அளிக்கிறோம். இயக்குநர்கள் தங்களுடைய சம்பளத்தை 1% நன்கொடையாக அளித்தால், சங்கத்தைச் சிறப்பாக நடத்த முடியும். பல நல்ல திட்டங்களைக் கொண்டுவர முடியும். இதை எப்படி செயல்படுத்தலாம் என்று பேசுவோம்.
மிக சிரமமான பணி தயாரிப்பாளருடையது தான். அதனைக் குறைக்கவே பலரும் இயக்குநர்களிடம் முதல் பிரதி அடிப்படையில் நீங்களே தயாரித்துக் கொடுங்கள் எனக் கேட்கிறார்கள். இப்போது பல துறைகளிலும் இதே முதல் பிரதி அடிப்படை வந்துவிட்டது. இன்று ஜாம்பவான் இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த யாரையுமே தயாரிப்பாளர்கள் நம்புவதில்லை. குறும்படம் பண்ணியிருக்கும், நாளைய இயக்குநர் போட்டியில் பங்கேற்பவர்களை மட்டுமே நம்புகிறார்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அவர்களுக்கு எவ்வித அனுபவமில்லாமல் உள்ளே வந்ததால் தான் இந்தப் பிரச்சினையே.
இயக்குநர்களாகிய நாங்களும் தோல்விப் படங்கள் கொடுத்திருக்கிறோம். இப்போது 50% படங்கள் எல்லாம் படமா என்கிறார்கள். அவை எல்லாம் எங்கள் சங்கத்து உறுப்பினர்கள் இயக்கிய படங்களே இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். டிஜிட்டல் முறை வந்தவுடன் யார் இயக்குநர், யார் தயாரிப்பாளர் என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்போது தொழிலாக அல்லாமல் பம்மாத்து வேலையாக மாறிவிட்டது.
பல படங்களுக்கு வெற்றி, சக்சஸ் மீட் நடத்துகிறார்கள். அதன் தயாரிப்பாளர்கள் கூட என் படம் வெற்றி என்று சொல்லவில்லை. அப்படியென்றால் ஏன் தவறான பிம்பத்தை உருவாக்குகிறீர்கள்?. அனைத்துமே நஷ்டம் என்றால் ஏன் இந்தத் திரையுலகம்?. 10 கேரவன் நின்று கொண்டிருந்தால் அது பெரிய பட்ஜெட் படமல்ல. ஒரு படத்தால் 10 பேர் பிழைத்தால் அது தான் பெரிய படம்.
நான் திரையுலகிற்கு வந்ததை விட இப்போது மொத்த ஆண்டு வருமானம் 10% உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் லாப சதவீதம் உயர்ந்து தானே இருக்க வேண்டும்? ஆனால் இல்லை. அப்படியென்றால் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. அதைச் சரி செய்ய வேண்டும்” என்று பேசினார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி