’தம்ப்ப்ப்ப்ப்ரீ’...... வெண்ணிற ஆடை மூர்த்திக்கு இன்று பிறந்தநாள்!

’தம்ப்ப்ப்ப்ப்ரீ’...... வெண்ணிற ஆடை மூர்த்திக்கு இன்று பிறந்தநாள்!
Updated on
7 min read

பூக்கடைக்கு விலாசம் எதற்கு என்பார்கள். பூக்களுக்கு மட்டும் அல்ல... நிறங்களுக்கும் முன்னுரையோ முகவரியோ தேவையில்லை. எப்போதும் பளீர் முகமும் ஜிலீர்ச் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர்.

மிக எளிமையாகவும் இனிமையாகவும் இவருக்கு  கடந்த வருடத்தில் நடந்தது சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண வைபவம். ஆனால் மனிதர் அப்போது போலவேதான் இப்போதும் இருக்கிறார். அதுசரி...  மனசுக்கும் வயசுக்கும்தானே தொடர்பு உண்டு.
இன்று வெண்ணிற ஆடை மூர்த்தி பிறந்தநாள் (ஜூலை 25). 


அவரிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவரது ஸ்டைலில் வந்த பதில்களும்..! 

உதவி இயக்குநர்கள் தொடங்கி சினிமாக்காரர்கள் பலரிடம் பேசும்போது, ‘மூர்த்தி சார் ரொம்ப ஜாலி டைப்’ என்கிறார்களே... இதென்ன மாயம்?

மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல. நாம நாமளா இருந்துட்டா, அடுத்தவங்க நம்மளை நல்லாவே ரசிப்பாங்க. இதுவரை 800க்கும் மேலே படங்கள் பண்ணிருக்கேன். வேலைன்னு வந்துட்டா அதுல இன்வால்மெண்ட், தேவைப்படும் போது பேசும் போது, யார்கிட்டயா இருந்தாலும் உண்மையா, அக்கறையா, மரியாதையா பேசுறது, மத்த நேரத்துல அமைதியோ அமைதி. இப்படி இருந்துட்டா, எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும். முக்கியமா, நம்மளை நமக்கேப் புடிச்சிப் போயிரும்! இதானே முக்கியம்.

 சோ டைரக்ட் பண்ணினார். நாகேஷ் படம் இயக்கினார். நீங்க ஏன் படம் டைரக்ட் பண்ணலை?

அந்த அளவுக்கு நான் புத்திசாலின்னா பாத்துக்கோங்களேன். டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை. நடிக்கறது பார்ட்டைம் வேலை. நம்ம பார்ட்டை சரியாச் செஞ்சிட்டு, அடுத்த படத்துக்கு தடக்குன்னு ஓடிடலாம். ஆனா டைரக்‌ஷன்ங்கறது ஃபுல்டைம் ஜாப். ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிலேருந்தும் பின்னாடிலேருந்தும் டிஸ்கஷன், ஸ்கிரிப்ட், ரைட்டிங், லொகேஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா நடிப்புன்னா, அதுக்குள்ளே அஞ்சு படங்கள் பண்ணிடலாம். இன்னொரு விஷயம்... எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும்.

ஆனாலும் ஒரு நப்பாசை இருந்துச்சு. கேரி ஆன் கிட்டுன்னு ஒரு டிராமா, களவுக்கலைன்னு டிடிக்காக ஒரு டிராமா. இன்னொரு டிராமாவை ’தி இந்து’  பத்திரிகைலதான் எடுத்தோம். அவங்கதான் அந்த சீரியல் பண்ணினாங்க.

தமிழ்ப்படம் பார்ட் 1ல நடிச்சது பத்தி? இப்போ தமிழ்ப்படம் 2 கூட வந்துருச்சே? 

எத்தனையோ படங்கள், எத்தனையோ கேரக்டர்கள். அந்தந்தப் படத்துல, அப்படி அப்படியான கேரக்டர்களை உள்வாங்கி நடிச்சிக்கொடுத்துட்டு போயிகிட்டே இருப்போம். தமிழ்ப்படமும் அப்படியான நல்ல அனுபவங்களைக் கொடுத்துச்சு. நல்ல டைரக்டர், அற்புதமான டீம்.

அதேசமயம் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படுறேன். எந்தத் தொழில்ல இருந்தாலும், அந்தத் தொழிலை கேலி பண்ணக்கூடாது. கிண்டல் செய்யக்கூடாது. இது என்னோட கருத்து.

ஒருபேச்சுக்கு... ஒருவேளை இயக்குநர் ஸ்ரீதர் உங்களை ஹீரோவாக்கியிருந்தால்?

ஃபெயிலியராகியிருப்பேன். ஒரு உண்மை சொல்லட்டுங்களா? ஸ்ரீதர் சாரோட உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தி மூலமா ஸ்ரீதருக்கு முன்னாடி போய் நின்னேன். என்ன மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படுறேனு கேட்டார். காமெடின்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டார். அவர் சிரிச்சது இருக்கட்டும்... உண்மையைச் சொன்னா நீங்களே சிரிப்பீங்க.

‘என்னப்பா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கே. ஹீரோவா, செகண்ட் ஹீரோவா போடுறேம்பான்னாரு. வேணாம்னுட்டேன். உன் மூஞ்சி, நல்லாப் படிச்ச முகமா இருக்கு. காமெடி செட்டாகாதுய்யான்னார் ஸ்ரீதர் சார்.

நான் வரேன் சார்னு கிளம்பி, அவர் ரூம் கதவுக்கிட்ட போனேன். ஒருத்தனுக்கு அவனோட நல்ல முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் நல்ல முகமே துரதிருஷ்டம் சார். பரவாயில்ல சார்னு சொன்னேன். இந்த வார்த்தைதான், எனக்கு வாய்ப்பு கொடுக்க, அதுவும் காமெடியனாவே வாய்ப்பு கொடுக்க, ஸ்ரீதர் சாரைத் தூண்டுச்சு.

 டபுள் மீனிங் காமெடி?

தமிழ் செழிப்பான மொழி. ஒரு சொல்லுக்கு பல மாதிரியான அர்த்தங்கள் இருக்கு. சொல்லப்போனா ஒரு சொல்லுக்கு எட்டுவிதமான அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க. ‘40 வருஷமா இந்த வேலைக்காரியை வைச்சிருக்கேன்னு ஒருத்தர் சொல்றார். இதை எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம். சென்சார் போர்டுல இருந்த லேடி ஒருத்தங்க, ‘சார், உங்க படத்துக்கு பத்து கட் கொடுத்திருக்குன்னு சொன்னாங்க. சரின்னேன். நீங்க ஒரு வக்கீலும் கூட. ஏன் சார் இதுமாதிரிலாம் பேசுறீங்கன்னு கேட்டாங்க. ஜன்னல்லேருந்து தெருவைப் பாக்கும் போது, நீங்க பாக்கறது ஒண்ணு; நான் பாக்கறது இன்னொண்ணு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணைப் பாப்பாங்க. இது ஜன்னல் கோளாறு இல்ல. நம்ம பார்வையோட சிக்கல்னு சொன்னேன்.

அதேசமயத்துல, நம்ம வாழ்க்கைல இதுமாதிரி போறபோக்குல நிறைய டபுள், டிரிபிள் மீனிங்லாம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்.

மனம் சோர்வடையும்போது என்ன செய்வீங்க?

தாங்க முடியாத சோகம், மீள முடியாத துக்கம்னெல்லாம் வந்ததில்ல. அப்படியொரு சோகமும் துக்கமும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரமும் இல்ல. இதை நான் முழுசா நம்பறேன்.

என்னடா இது சோகமா இருக்குன்னு இசை கேக்கறது, கடுமையா விறுவிறுன்னு வாக் போறது... இப்படிலாம் எதுவுமே பண்றதில்ல. இந்த மாதிரி தருணங்கள்ல, கொஞ்சம் அமைதியா இருந்தா... ஒரு அமானுஷ்யம் நடக்கும். உங்களைக் காப்பாத்தும். அது தெய்வ அனுக்கிரகம், அதிர்ஷ்டம், ஜாதக பலன் எப்படி வேணா வைச்சுக்கலாம். இந்த மாதிரி வரும்போது, நான் கடவுள்கிட்ட ஒப்படைச்சிருவேன். அவ்ளோதான்!

சினிமா உலகில், வாடா போடா நண்பர்கள்?

முதல்ல ஒரு விஷயம் சொல்லணும். இந்த வாடாபோடான்னு யாரைக் கூப்பிடுறதும் எனக்குப் பிடிக்காது. ஏன்னா, எங்க அப்பா எங்களை அப்படிலாம் கூப்பிட்டதே இல்ல. அதேபோல, நானும் என் மகனை வாடா, என்னடா பண்றேன்னெல்லாம் பேசினதே கிடையாது.

எங்க அப்பாகிட்டருந்து கத்துக்கிட்டேன். அடுத்தாப்ல, சிலோன், சிங்கப்பூர்னு போயிருந்தப்ப, அங்கெல்லாம் குழந்தைகளை வாங்க போங்கன்னு மரியாதையோட பேசினதைப் பாத்தேன். குழந்தைங்களை தெய்வம்னு சொல்லிட்டு, நாம நாயேபேயேன்னு திட்டுறோம். ஆனா அங்கே அப்படியில்ல. இது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு.

இன்னொரு உண்மை சொல்றேன். இப்பதான் சதாபிஷேகம் நடந்துருக்கு. என் மனைவியை இதுவரை வாடிபோடின்னெல்லாம் சொன்னதே இல்ல. இத்தனைக்கும் எங்க சமூகத்துல அப்படிப் பேசுறதெல்லாம் ரொம்பவே சகஜம். இன்னிக்கி, பசங்களும் பொண்ணும் சர்வ சாதாரணமா அப்படிலாம் இஷ்டத்துக்குக் கூப்பிடுறாங்க. கலாச்சாரம், மாற்றம், புடலங்கா... என்னத்தச் சொல்றது.

நான், செட்ல இருக்கும்போது, யாரையும் மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. சின்னப்பையனா இருந்தாக்கூட, வாங்க தம்பின்னு சொல்லுவேன்.

சரி... அப்படி டா போட்டு பேசுற ரெண்டு நண்பர்கள் உண்டு. ‘என்னடா வாங்கபோங்கன்னு. அசிங்கமா இருக்கு. இனிமே டா போட்டுதான் பேசணும்னு முடிவுபண்ணினோம். அந்த நண்பர்கள், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும்! அப்படியொரு ஆத்ம நண்பர்கள் எனக்கு.

 டூயட் பாடிய அனுபவம்?

 எனக்கு எந்த அனுபவமும் இல்ல. டைரக்டருக்கும் டான்ஸ் மாஸ்டருக்கும்தான் மிகப்பெரிய அனுபவம். வாழ்க்கைல அப்படியொரு டான்ஸை அவங்க பாத்துருக்கவே மாட்டாங்க. ஒருதடவை, சுந்தரம் மாஸ்டர் கத்துக்கொடுக்கறாரு. மலைப்பகுதில, குளிர்காலத்துல ஷூட்டிங். காலெல்லாம் உறைஞ்சு போச்சு. எனக்கு டான்ஸே வரல. வேறவேற மாதிரி ஆடினேன். கோபமானவர், ஸ்ரீதர் சார்கிட்ட போய் புகார் வாசிச்சார். ‘என்னய்யா நீ. உன் அளவுக்கு டான்ஸ் பண்ணுவாரா அவரு. சின்னப்பையன், முத படம். அப்படித்தான் கூடக்குறைச்சி இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணு. டென்ஷனாகாதேன்னு சொன்னாரு. அதான் ஸ்ரீதர் சார்!

 ஏன் மீசை வளர்க்கலை?

வளர்க்கணும், மீசை வைச்சுக்கணும்னெல்லாம் தோணலை. ஆம்பளைக்கு அழகு மீசைன்னு சொல்லுவாங்க. மீசை இல்லாட்டி அழகு இல்லையா, ஆம்பளைதான் கிடையாதா? மழமழன்னு மூஞ்சியை வைச்சிருந்தாத்தான், படத்துக்குப் படம் இஷ்டத்துக்கு மீசையை ஒட்டிக்கலாம். மீசை இல்லேன்னாத்தான் மீசையை ஒட்டிக்கறது ஈஸி. அதனால மீசையும் இல்ல; மீசை மேல ஆசையும் இல்ல!

 உங்க 100வது படம்?

 சத்தியமா ஞாபகமே இல்ல சார். நீங்க கேக்கும்போதுதான், ஆமால்ல... நம்ம நூறாவது படம் என்னன்னு யோசனை போவுது. அப்படியே நடிச்சிட்டிருந்தாச்சு. தவிர, ஹீரோ, ஹீரோயின்னா, நூறாவது படம் முக்கியமா சொல்லுவாங்க. நாம காமெடியன் தானேன்னு அதையெல்லாம் புத்தில ஏத்திக்கலை.

விஸ்வநாதன் ராமமூர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி...?

மூணுபேருக்கும் ஒற்றுமையா இருக்கறது ரெண்டு. ஒண்ணு... மூர்த்திங்கற பேரு. அடுத்த ஒற்றுமை... மூணு பேருமே சினிமாக்காரங்க. ஆனாலும் முதலாமவர் இசை சம்பந்தப்பட்டவர். அடுத்தவர் நாடகங்கள்ல கொடிகட்டிப் பறந்தவர். மூணாவதா இருக்கறவர் சினிமால நடிகரா அறிமுகமாகி, நாடகங்கள்லயும் நடிச்சவர். கமலோட மாலைசூடவா, மோகனோட ருசின்னு மட்டுமில்லாம, 300 படங்களுக்கும் மேல காமெடி டிராக் எழுதினவர். மீண்டும் மீண்டும் சிரிப்பு மூலமா உங்க வீட்டுக்கே வந்து, ஹால்ல உக்கார்ந்தவர்.

வெண்ணிற ஆடை மூர்த்திக்குப் பிடித்த நிறம்?

வயலெட் கலர் ரொம்பப் பிடிக்கும். அதேபோல வெளிர்நீலமும் பிடிக்கும். ப்ளூ கலர் சட்டை கிடைச்சிருது. ஆனா வயலெட் கலர்ல சட்டையை விட, டிஷர்ட்தான் நிறைய்ய கிடைக்குது. அதனால, டிஷர்ட் போட்டுக்கறதுல ஒரு ஆர்வம் வந்துச்சு.

அந்த தம்ப்ப்ப்ரீ... எப்படி, எங்கே பிடிச்சீங்க சார்?

அது விளையாட்டாச் செஞ்ச விஷயம். மகேந்திரன் சாரோட நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்துலதான் அப்படிச் சொல்ல ஆரம்பிச்சேன். டைரக்டர் கூட வேணாமே மூர்த்தி சார்னு சொன்னார். ‘சார், இதாவது இருக்கட்டும் சார். உங்க படத்துல எனக்கு காமெடி ரோல் தராம, சீரியஸ் ரோலே தர்றீங்க. இதுமட்டுமாவது இருந்துட்டுப் போகட்டும் சார்’னு கேட்டுக்கிட்டேன். அவரும் வைச்சார். ஆனா இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்ல.

அப்புறம் என்னாச்சுன்னா... என்னை படத்துக்கு புக் பண்ண வரும்போதே, டைரக்டர்கள், ‘மானே தேனேன்னு போட்டுக்கங்க’ன்னு சொல்ற மாதிரி, சார், அங்கங்கே உங்க ஸ்டைல்ல இதையெல்லாம் சொல்லிருங்க சார்னு சொல்லிருவாங்க. எப்படியும் 25 படங்களுக்கு மேல இதைப் பண்ணிருப்பேன். எனக்கே போரடிக்குதுன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.

இப்படித்தான், குதிரை கனைக்கிற மாதிரி ஒரு பொண்ணைக் கூப்பிடுற சீன். இதைப் பாத்துட்டு கமல் சார், ‘உலகத்துல எவனும் ஒரு பொண்ணை இப்படிக் கூப்பிட்டிருக்கமாட்டான் சார்’னு கிண்டல் பண்ணினார்.

நீங்கள் ரொம்பவே மிஸ் பண்ணும் நபர்?

அப்பா. ரொம்ப ரொம்ப நல்ல அப்பா. அவர் பேரு நடராஜ சாஸ்திரி. அந்தக் காலத்து தென்னாற்காடு மாவட்டத்துல மிகப்பெரிய கிரிமினல் வக்கீல். ஸ்ட்ரிக்டானவர்தான். ஆனா அப்படியொரு பாசமும் பிரியமும் காட்டுவார். சிதம்பரம்தான் சொந்த ஊரு. ரொம்ப ஒழுக்கமா, ஒழுங்கா இருப்பார். நம்மையும் அப்படி எதிர்பார்ப்பார். அவரோட உதவி செய்ற குணம் பார்த்து வியந்திருக்கேன்.

வீட்டுக்குப் பக்கத்துல புதுசா டாக்டர் ஒருத்தர் குடிவந்தார். என்ன சார் எல்லாம் செளகரியமா இருக்கானு அப்பா கேட்டார். எல்லாம் சரி,. நல்ல பால்தான் கிடைக்கலைன்னு டாக்டர் சொன்னார். உடனே அப்பா என்ன பண்ணினார் தெரியுமா? வீட்ல இருந்த ஒரு பசுமாட்டை அவர் வீட்டுக்குக் கொடுத்துட்டார். எங்க வீட்ல நிறைய பசுமாடுங்க இருந்துச்சு. பசுமாடு, ஐஸ்வரியம், வீட்டு லக்ஷ்மி, செல்வம்னு என்னென்னவோ சொன்னாங்க. ஆனா இது எதையுமே அப்பா பாக்கலை; எப்பவும் பாக்கவும் மாட்டார்.

எனக்கு என்னன்னா, எங்க அப்பா என்னை தூக்கிவைச்சுக்கிட்ட மாதிரியோ மடில உக்கார வைச்சிக்கிட்ட மாதிரியோ ஞாபகமே இல்ல எனக்கு. அவரோட கண்டிப்பும் நேர்மையும் சுத்தமும் நேரந்தவறாமையும்தான் என்னையும் அப்படியே வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

சொந்த ஊர்?

அப்பாவுக்கு சிதம்பரம். அம்மாவுக்கு திருவிடைமருதூர்ப் பக்கம் திருவிசநல்லூர். வேதம், சாஸ்திரம்னு நிறைஞ்ச ஊரு. அப்பா பேரு கே.ஆர்.நடராஜ சாஸ்திரி, அம்மா பேரு சிவகாமி. சிதம்பரத்துல எப்படி நடராஜரும் சிவகாமியுமோ, அப்படித்தான் சிதம்பரத்துல இந்தத் தம்பதியும். பேருப்பொருத்தம் அமைஞ்சது ஆச்சரியம்தான். ஆனா ஒருவிஷயம் சொன்னா நம்புவீங்களா?

 எனக்குத் தெரிஞ்சு, அப்பாவோ அம்மாவோ, சிதம்பரம் கோயிலுக்குப் போய் பாத்ததே இல்ல. அபிஷேகத்துக்குச் சொல்லுவார். பூஜைக்குச் சொல்லுவார். எல்லாம் செய்வார். ஆனா போறதில்ல. யாராவது சொந்தக்காரங்க வந்து, அவங்களைக் கூட்டிட்டுப் போகணுமேன்னாத்தான் உண்டு. எனக்கு... சிதம்பரத்தை மறக்கவே முடியாது. ரயில்வே ஸ்டேஷன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கடைவீதி எதையும் மறக்கமுடியாது.

சாப்பாட்டு ராமனா நீங்க?

அளவாத்தான் சாப்பிடுவேன். டாக்டர் எதுஎதெல்லாம் நல்லதுன்னு சொல்றாரோ, அது எதையும் நான் சாப்பிடுறதில்ல. பருப்பு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் அவ்ளோதானே உணவு? இப்ப என்னடான்னா, ஆர்கானிக் ஆப்பிள்ங்கறான். என்னென்னவோ மாறிருச்சு உணவுல!

நான் சின்னப்பையனா இருக்கும் போதெல்லாம் கேன்ஸர்னு காதாலக் கேட்டது கூட இல்ல. ஆனா இன்னிக்கி எத்தனை பேருக்கு கேன்ஸர் வந்துட்டிருக்கு, பாருங்க! உணவு சுத்தமாவே அசுத்தமாயிருச்சு.

நடுவுல போண்டா, பஜ்ஜின்னு உள்ளே லபக்குன்னு இறக்குறதெல்லாம் கிடையாது. இப்பதான் நைட் சப்பாத்திக்கு மாறிருக்கேன்.

டெட்டால், ஏஸி ரூம், ஜாக்கிங், வாக்கிங்னு ஆரோக்கியமான பேக்கேஜ் லைஃப்ல புதுசுபுதுசா நோய்கள். நூறு வயது வாழ்வது எப்படி?ன்னு புக் போடுறான். ஆனா அவனே நூறு வயசு வாழ்றது இல்லியே! சரி... நூறு வயசு வரை ஏன் வாழணும்? அதுவும் தெரியல நமக்கு. அதுவொரு சுமைதானே! இருக்கிற வரைக்கும் ஆக்டீவா, நிம்மதியா, சுமைன்னு இல்லாத அளவுக்கு வாழ்ந்துட்டுப் போயிடணும். அதுக்கு உணவெல்லாம்தான் சிக்கல். அப்படியிருக்கும்போது சாப்பாட்டு ராமனா இருக்கறதெல்லாம் சான்ஸே இல்ல எனக்கு!

தியேட்டரில், ஒரு ரசிகராக ஒரே படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி. ஒன்பது தடவை பார்த்தேன். சிதம்பரத்துல நடராஜான்னு ஒரு தியேட்டர். நாலணாதான் டிக்கெட். நாலுமணி நேரம் ஓடும் படம். அந்தத் தியேட்டர்ல ஒரு இடம்... என் உசரத்துக்கு மறைக்கவே மறைக்காதுங்கற மாதிரியான இடம். டிக்கெட் கிழிக்கிற அண்ணன்கிட்ட அந்த இடத்துல யாரும் உக்காராமப் பாத்துக்கச் சொல்லிருவேன்.

அந்தத் தியேட்டர்ல, ரீல் கட் பண்ணி அடிக்கடி பிலிம்கள் தூக்கிப் போடுவாங்க. அதையெல்லாம் கேட்டு வாங்கி, லென்ஸ் வைச்சுக்கிட்டு, ஒவ்வொரு ஃபிலிமா வைச்சு, என் நண்பர்களுக்கு ‘பிலிம்’ காட்டினதெல்லாம் ஞாபகம் இருக்கு. அந்தப் பிலிம்ல இருக்கிறதைக் காட்டும்போது, பின்னணில... ‘இதோ... மன்னன் கானகம் சென்றுவிட்டான். அங்கே அவன் நடந்துகொண்டிருந்தபோது...’ அப்படின்னு நான் வாய்ஸ் கொடுப்பேன். செம கலாட்டா நாட்கள் அதெல்லாம்!

உங்க காமெடியால, மத்த நடிகருங்க அதிக டேக் எடுக்கும் நிலை வந்திருக்கிறதா?

அப்படிலாம் சொல்லமுடியாது. பொதுவா, அந்தக் காட்சியை பேசிப்பேசிப் பாத்துக்கும்போதே, சிரிப்பு மொத்தமும் சிரிச்சிட்டுதான் நிப்போம்; நிப்பாங்க. அதனால அப்படிலாம் டேக் வாங்கற நிலை வந்தது இல்ல. நடிச்சிட்டிருக்கும் போதே தடக்குன்னு எதுனா சேர்த்துச் சொல்லும்படி ஆகும். அப்பவும் சிரிப்பு வந்துரும் கூட நடிக்கிறவங்களுக்கு! ஆனா, அதை டேக் எடுத்து முடியறவரைக்கும் காட்டிக்காம, வெடிச்சுச் சிரிச்ச அனுபவங்கள் நிறையவே நடந்திருக்கு.

மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது- இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்படி அடுக்குமொழியாகட்டும். கீர்த்தியாகட்டும்... இதெல்லாம் எனக்கு ஒத்துவராது. பொருந்தவும் செய்யாது. இதுல என்ன அல்ப சந்தோஷம்னா... யாராவது கிண்டலாச் சொல்லும்போது கூட, மூர்த்திகீர்த்தின்னுதானே சொல்லியாகணும்!

உங்கள் சினிமா வாழ்வில், டர்னிங் பாயிண்ட்..?

  யோசிச்சுப் பாத்தா, அப்படி டர்னிங்பாயிண்ட் மாதிரியான படங்கள்னு எதுவும் அமையலன்னுதான் சொல்லணும். காசேதான் கடவுளடா படம் அப்படிப்பட்ட படம்தான். ஆனா, அந்தப் படம் தேங்காய் சீனிவாசனுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டா அமைஞ்சிச்சு. எனக்கு அப்படிலாம் நடக்கல. ஒரு அஞ்சாறு படம் கைல இருக்கும். நடிச்சுக்கிட்டே வருவேன். திரும்பவும் அஞ்சாறு படம் வந்துரும். இப்படித்தான் 800 படங்கள் வரை பண்ணிருக்கேன். என்ன ஒண்ணு... எந்தப் படமா இருந்தாலும் அதுல ஏதோ ஒருவகைல, மக்கள் மனசுல நின்னுருவேன். கடவுளுக்கும் டைரக்டர்களுக்கும் நன்றி.
அதென்ன... மகேந்திரன் படங்களில் நீங்கள் ஸ்பெஷல். எல்லாப் படத்திலும் இருக்கிறீர்கள். கேரக்டர் ரோல் வேறு. என்ன காரணம்?

எம் மேல ஒரு நம்பிக்கையோ என்னவோ... அவரோட முள்ளும்மலரும் படத்துலேருந்தே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துடுவாரு. அதுவும் என்னை காமெடியனாவே அவர் பாக்கமாட்டார். கேரக்டர் ரோல்தான். மிகச்சிறந்த இயக்குநர் அவர்.

இப்படித்தான்... ஒருமுறை அவர் படத்து ஷூட்டிங். மத்தியானம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். வீட்ல சாப்பிட்டெல்லாம் முடிச்சிட்டு, போய் நின்னேன். ‘என்ன சார்’னு கேட்டாரு. ‘இன்னிக்கி என் போர்ஷன் இருக்கே சார்’னு சொன்னேன். ‘அடடா... அடுத்த வாரம்தான் சார் இருக்கு’ன்னார். ‘சரி சார்... ஸாரி சார். வந்ததுக்கு ஒரு போட்டோவாவது எடுக்கச் சொல்லுங்க. அந்த திருப்தியோட கிளம்பறேன்’னு சொன்னேன். ரெண்டே நிமிஷம்... மெளனமா இருந்தார்.

‘நீங்க ரெடியாகுங்க சார். இன்னிக்கே எடுத்துடலாம்’னு சொல்லிட்டு அடுத்த அரைமணி நேரத்துல, என் கேரக்டருக்கான வசனத்தையெல்லாம் எழுதி, கையில கொடுத்தார். அந்தப் படம் ‘மெட்டி’. அதுல நான் புரோக்கர். எல்லாத்துக்குமே புரோக்கர். கல்யாணப் பொண்ணைப் பத்தி வாடகை வீடு கேக்கறவங்ககிட்டயும், வீடு விஷயமா கேக்கறவங்ககிட்ட மாப்பிள்ளை பத்தியும்னு மாத்தி மாத்திச் சொல்லுவேன். அதுவொரு காமெடியா, ஜாலியா இருக்கும். அத்தனை அற்புதமான இயக்குநர் மகேந்திரன் சார்.

ஆச்சி?

அருமையான மனுஷி. அற்புதமான நடிகை. யார் யாருக்கெல்லாமோ சாய்ஸ் உண்டு. மனோரமாவுக்கு சாய்ஸே இல்ல. அவங்களோட 40 படங்களுக்கும் மேல பண்ணிருப்பேன். காமெடி பண்ணிக்கிட்டே இருப்பாங்க. சீரியஸாவும் பிரமாதப்படுத்திருவாங்க. காமெடியும் இல்லாம, சீரியஸாவும் இல்லாம, குணச்சித்திரமா நடுவுல நின்னும் அசத்திருவாங்க. எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்கற அந்த குணம், ரொம்பப் பிடிக்கும் எனக்கு. தமிழ் சினிமாவில், காமெடி, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு மனோரமா அடைந்த உயரம், வேற யாரும் தொட முடியாத இடம் அது!

காமெடி நடிகைகள் குறைவு. ஏன்?

இங்கே ஒரு விஷயம், தப்பாவே யோசிக்கப்படுதுங்கறது என் அபிப்ராயம். சினிமால காமெடி நடிகையா நடிக்கிறாங்கன்னா, நாம  அழகு இல்லைன்னு அவங்களே முடிவு பண்ணிடுறாங்க. அழகுக்கும் நடிப்புக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல எனக்கு! ‘ஹீரோயின் சான்ஸ் கிடைக்கல. காமெடி ரோலாவது பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்’னு சொன்னவங்களைப் பாத்திருக்கேன். சச்சு அழகுதானே! ஸ்ரீதர் சார் கூப்பிட்டு, காமெடி ரோல் கொடுக்காம இருந்தா, இவ்ளோ வருஷம் நின்னுருக்கமுடியாது அவங்க. எப்படிப்பட்ட மூஞ்சியா இருந்தாலும் சரி, நம்மளைப் பிடிச்சிருச்சுன்னா, நம்ம மூஞ்சியும் பிடிச்சிப்போயிரும். என் மூஞ்சிய ஆடியன்ஸ் ஏத்துக்கலையா, சொல்லுங்க!

 டி.வி. மீடியாவை எப்படி பாக்கறீங்க?

கண்ணாலதான்னு கடிக்கலாம். இப்ப இருக்கிற ஆடியன்ஸ், செம ஷார்ப். டி.வி. அசுரத்தனமான வளர்ச்சிகொண்டது. இப்படி வளர்ச்சியடையும்னு நல்லாவே தெரிஞ்சுது. அந்த சமயத்துல கூப்பிட்டு, பண்றீங்களான்னு கேட்டாங்க. மீண்டும் மீண்டும் சிரிப்பு பண்ணினேன். திரை வேணும்னா சின்னதா இருக்கலாம். ஆனா ரீச் ரொம்பவே அதிகம். என் மீண்டும் மீண்டும் சிரிப்புக்கு அப்படியொரு ரெஸ்பான்ஸ்.

அதுக்குப் பிறகு கே. பாலசந்தர் சார், பாலுமகேந்திரா, லட்சுமின்னு நிறைய பேர் வந்தாங்க. ஜெயிச்சாங்க. இதனோட வளர்ச்சியும் தாக்கமும் வீரியமும் இன்னும் இன்னும் அதிகமாயிட்டுதான் போகும்.

- ஜாலியும் கேலியுமாக, ரகளையும் ரவுசுமாக பதிலளித்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி. 

அவரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 25). மனதார வாழ்த்துவோம். வெண்ணிற ஆடை மூர்த்தி இன்னும் இன்னும் நலமுடன் வாழ வாழ்த்துகள்! 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in