

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
சக்ரி டோல்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது.
முதலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்டு, பின்பு குளறுபடிகள் ஏற்பட்டதால் மதியழகன் தயாரிப்பாளராக மாறினார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சாடல், திமுகவிலிருந்து நீக்கம் என கடும் எதிர்வினைகளைச் சந்தித்தார் ராதாரவி.
ஒரு வழியாக அனைத்தும் தீர்க்கப்பட்டு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட போது, தலைப்புக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அனைத்து சுமுகமாக முடிவடையவே, ஜூலை 26-ம் தேதி வெளியீடு என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
தற்போது, பல்வேறு படங்கள் வெளியாவதால் மீண்டும் புதிதாக ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியீடு என்று தினசரி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இதுவரை 5-க்கும் மேற்பட்ட முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.