

அஜித்துக்கு கிடைத்துள்ள வெற்றி அவருக்கு உரியதுதான் என்று கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
சென்னையில் ஒரு நகைக் கடைத் திறப்பு விழாவுக்கு நேற்று (ஜூலை 24) வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அப்போது 'தி இந்து' பத்திரிகையாளருக்கு அவர் அளித்த பேட்டி:
“மணிரத்னம் இயக்கத்தில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதை உறுதி செய்கிறேன். மணிரத்னத்துடன் ஒரு பயணத்தில் இருக்கிறேன். அவர் என்ன செய்ய நினைத்தாலும் அதில் பங்காற்றுவது எனக்குப் பெருமையே. ஆனால் அவரை மீறி அந்தப் படம் பற்றி மேலும் பேசுவது நன்றாக இருக்காது. அவர் எனது குரு. அவர் இயக்கத்தில்தான் நான் நடிக்க ஆரம்பித்தேன். எங்களுக்கு இடையே தொழில்ரீதியாக நல்ல நட்பு இருந்தாலும் அவர் நினைக்கும் நேரத்தில் படத்தைப் பற்றி பகிர்வது அவரது விருப்பம்.
அஜித், மிக மென்மையான, அற்புதமான மனிதர். ரசிகர்களிடம் அவர் பெற்றிருக்கும் இந்த அன்பையும், வெற்றியையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு அவர் தகுதியானவர் தான்.
‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில், அவருடன் நான் நிறைய காட்சிகளில் நடிக்கவில்லை என்றாலும் படப்பிடிப்பில் அவரை சந்தித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவரது குடும்பத்தை சந்தித்ததும் என் நினைவில் உள்ளது. மீண்டும் நாங்கள் சந்தித்தால், அவரது இந்த தகுதியான வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.