

வைபவ், நந்திதா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘டாணா’ திரைப்படம் குடும்பம், ஆக்ஷன், காமெடி கலந்த கலவையாக இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி உருவாக்கியுள்ளார்.
படம் குறித்து நாயகன் வைபவ் கூறும்போது, ‘‘இம்முறை நந்திதா, யோகிபாபு, இயக்குநர் யுவராஜ் என முற்றிலும் புதிய கூட்டணி. ஆனால் எல்லோருமே நண்பர்கள்தான். படத்தில் சென்டிமென்ட், காதல், காமெடி என எல்லாவிதமான அம்சமும் இருந்ததால் கதை கேட்டதும் ஒப்புக்கொண்டேன். கிராமத்தில் ஒரு பெரிய குடும்பம். ஹீரோவுக்கு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவனுக்கோ அவ்வப்போது பெண் குரலில் பேசுவது மாதிரியான ஒரு பிரச்சினை இருக்கும். இந்நிலையில் அவனது விருப்பம் என்ன ஆகிறது.
அதை காதல், காமெடி கலந்து இயக்குநர் தொட்டிருக்கிறார். நாங்களும் அதை அழகாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறோம். இதில் நாயகி நந்திதா ஒரு இன்ஸூரன்ஸ் ஏஜென்ஸி நிறுவனம் சார்ந்த சூழலில் நடித்திருப்பாங்க. அவங்க பகுதியும் ரசிக்கும்படியாக இருக்கும்!’’ என்கிறார், வைபவ்.