

'காஞ்சனா 3' படத்துக்குப் பிறகு சூப்பர் ஹீரோ கதையொன்றை 3டி-யில் இயக்கி, நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார் லாரன்ஸ்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கி நடித்த படம் 'காஞ்சனா 3'. ஸ்ரீமன், கோவை சரளா, ஓவியா, வேதிகா, சூரி உள்ளிட்ட பலர் லாரன்ஸ் நடித்திருந்தனர். ஏப்ரல் 19-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக சோபிக்கவில்லை என்றாலும், வசூல் ரீதியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தாண்டு 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து, 'காஞ்சனா 3' படமே விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து, தங்களுடைய நிறுவனத்தே அடுத்த படத்தை இயக்குமாறு, ஒரு பெரும் தொகையை லாரன்ஸுக்கு அட்வான்ஸாக கொடுத்தது சன் பிக்சர்ஸ்.
இந்தப் படம் 'காஞ்சனா 4' என்று தகவல்கள் வெளியானது. ஆனால் லாரன்ஸ் எதையும் உறுதிப்படுத்தாமல், இந்தியில் உருவாகும் 'காஞ்சனா' ரீமேக்கை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், கைரா அத்வானி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
தற்போது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ள படம் சூப்பர் ஹீரோ கதை என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதை 3டி-யில் பெரும் பொருட்செலவிலும் உருவாக்கவுள்ளனர். தமிழில் உருவாகும் முதல் சூப்பர் ஹீரோ படமாக இது அமைந்துள்ளது.