

சர்ச்சைக்குள்ளான படம் தான் 'ஆடை' என்று திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டார்.
வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 25-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, அமலாபால் மற்றும் இயக்குநர் ரத்ன குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, "இந்த மேடையில் நான் நிற்பதற்குக் காரணம் சினிமா. இந்த மண், மக்கள் உள்ளிட்டவை தான் எனக்கான படிப்பு. என்னுடைய கடைசி மூச்சு வரை சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். அதனால் மட்டுமே அரசியலுக்குள் நான் நுழையவில்லை.
உலகத்திலேயே பெரும் பணக்காரர்களில் ஒருவர் அம்பானி. என்னிடம் கடவுள் 'ஒரு பிறவியில் அம்பானியாக வருகிறாயா' என்று கேட்டால், 'மன்னிக்கவும்.. மீண்டும் பாரதிராஜாவாக பிறக்க ஆசை. அதுவும் இயக்குநராக' என்று சொல்வேன். சினிமா மாதிரி ஒரு அற்புதமான விஷயமே கிடையாது. கலைஞர்களுக்கு ஒரு வரைமுறையே கிடையாது.
ரத்னகுமார் மற்றும் அமலாபால் இருவரையும் காதலிக்கிறேன். ஏனென்றால், கோடுகளைத் தாண்டாமல் கோலம் போடவே முடியாது. வழக்கமான கோடுகளைத் தாண்டுபவன் தான் நடிகன். இன்னும் 'ஆடை' படத்தைப் பார்க்கவில்லை. சர்ச்சைக்குள்ளான படம் தான். கலைஞனுக்கு ஒரு எல்லை இல்லை. அனைத்தையுமே தாண்ட வேண்டும். நானும் தாண்டாத எல்லைகள் உள்ளன. சில விஷயங்களை உடைத்திருக்கிறேன். இன்னும் நான் ஏதாவது செய்ய வேண்டும். ரத்ன குமார் மற்றும் அமலாபால் இருவரையும் பார்த்தால் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார் இயக்குநர் பாரதிராஜா.