

ஒவ்வொரு காரணமாகக் கூறி தள்ளி வைக்கப்படுகிறது. பின்பு எப்போது தான் படத்தை வெளியிடுவது எனத் தெரியவில்லை என்று சந்தானம் வேதனையுடன் குறிப்பிட்டார்.
சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'A 1'. புதுமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சந்தானம், 'நான் கடவுள்' ராஜேந்திரன், தாரா அலிசா பெரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜூலை 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசும் போது, “2003-ல் தமிழ்த் திரையுலகிற்கு 'மன்மதன்' படத்தின் மூலம் அறிமுகமானேன். அப்போதிலிருந்து சில ஏற்ற, இறக்கங்கள் மூலம் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
என்னுடைய காமெடி, பன்ச் வசனங்கள் என அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் என்னுடைய டீம் தான். ஆனந்த், முருகன், சேது, மாறன், சுந்தர், குணா, ஜான்சன் உள்ளிட்டவர்கள்தான் என்னுடைய டீம். அவர்கள் தான் எனக்கு முதுகெலும்பு.
நிறைய படங்கள் பார்த்து, இந்தக் காமெடி பண்ணலாம். இந்த பன்ச் போடலாம் என்றெல்லாம் சொல்வார்கள். அதற்குப் பிறகு எனது தயாரிப்பு நிறுவனத்திலும் பலர் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இந்த 'A1' படத்தின் மூலம் ஜான்சன் இயக்குநராகவும், என் தயாரிப்பு நிறுவனத்திலிருந்த ராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள்.
வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இயக்குநர் ஜான்சன். ஆகையால், தான் சந்தித்த விஷயங்களை எல்லாம் வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார். அதைக் கேட்டவுடன், என் ஸ்டைலுக்கான பன்ச் வசனங்கள் இதில் சேர்க்க முடியுமா? என யோசித்தேன். கதையாகவே கொஞ்சம் புதிது என்பதால், என்னுடைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும். இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, நான் மியூசிக் பண்றேன். கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னவர் சந்தோஷ் நாராயணன். அவருக்கு நன்றி.
நம் குடும்பம், நண்பர்கள், சுற்றியிருப்பவர்கள் என அனைவருமே உறுதுணையாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அந்த விதத்தில் குடும்பம், நண்பர்கள் என அனைவருமே நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என்று என் ரசிகர்கள், என் வீட்டுக்கு பிரசாதம் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது கடினமாக இருக்கிறது.
ஐபிஎல், அவெஞ்சர்ஸ் என ஒவ்வொன்றாகக் கூறி படத்தை வெளியிட வேண்டாம் என்கிறார்கள். ஒருவழியாக ஒரு தேதியை முடிவு செய்தால் மாதக் கடைசி இப்போது வேண்டாம் என்கிறார்கள். பின்பு எப்போது தான் படத்தை வெளியிடுவது எனத் தெரியவில்லை. படத்தை எடுத்து வெளியிட முடியாமல் வட்டித் தொகை எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இந்தக் கஷ்டத்தை உணர்ந்து தொலைபேசியில் படம் பார்க்காமல், திரையரங்கில் சென்று படம் பாருங்கள்”.
இவ்வாறு சந்தானம் பேசினார்.