

நடிகர் சூர்யா இன்று தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிறந்த நாள் காணும் நடிகர் சூர்யாவுக்கு ட்விட்டரில் வீடியோ வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "சில கஷ்டங்கள் அதற்குள் பல இழப்புகள் உள்ளன. பல சங்கடங்களை, பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும். அதைநான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். நீ, சமூக நீதிக்காக, கல்விக்காக குரல் கொடுத்ததை ரொம்பப் பெருமையாக நினைக்கிறேன். அதைகூட வெறும் நுனிப்புல் மேய்ந்து மேலோட்டமாக சொல்லாமல் ஆழமாக இறங்கி அலசி ஆராய்ந்து என்ன சொல்லவேண்டுமோ அதைச் சொல்லியிருக்கிறாய். வயதில் பெரியவன் என்பதால் வாழ்த்துகிறேன். ஆனால் உன் துணிச்சலை வணங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார் நடிகர் சூர்யா. இதனால் தமிழக பாஜக தொடங்கி ஆளும் அதிமுகவரை அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை துணிச்சலுடன் விமர்சித்ததால் தான் தலைவணங்குவதாக நடிகர் சத்யராஜ் பிறந்த நாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.