

'ஆடை' படம் பற்றி விவாதிக்க தயாரா என்று நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேட்டதற்கு தயார் என்று பதிலளித்துள்லார் அந்தப் படத்தின் இயக்குநர் ரத்னகுமார்.
அமலா பால், வி.ஜே ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆடை'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஆடை' படத்தில் அமலா பாலின் துணிச்சலான நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்தப் படம் பணப் பிரச்சினையில் சிக்கியபோது அமலா பால் செய்த உதவியால் தான் படமும் வெளியானது. இதற்கும் தயாரிப்பாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆடை' படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பதிவில், “அமலா, ஆடைக்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? உங்களுக்கும், இயக்குநருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக, நடிகராக அல்ல, ஒரு ரசிகையாக, பெண்ணாக, பெண்களின் அம்மாவாக” என்று கேட்டிருந்தார்.
இதற்கு, "உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் எப்போது விவாதத்துக்குத் தயார். அமலாபாலும் தயார். ஆனால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதை நாம் வீடியோவாக எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று படத்தின் இயக்குநர் ரத்னகுமார் பதிலளித்துள்ளார்.