ரசிகை வீட்டுக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் தேவரகொண்டா

ரசிகை வீட்டுக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் தேவரகொண்டா
Updated on
1 min read

தனது ரசிகை வீட்டுக்கு நேரடியாகச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

19 வயதான தியா தாமஸ், விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை. ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய். 'டியர் காம்ரேட்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் முன்னதாக விஜய் பங்கேற்றிருந்தார்.

இந்த வருகை குறித்து பேசிய தியா, "என் கற்பனையையும் தாண்டிய விஷயம் இது. என் நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் தூரத்திலிருந்து கூட ஒரு நட்சத்திரத்தைப் பார்த்ததில்லை. விஜய் தேவரகொண்டாவைப் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை. எனது சகோதரருக்கு விஜய் வருவது தெரிந்திருந்தும் அவர் ரகசியமாக வைத்திருந்தார். குடும்பத்தில் வேறு யாருக்கும் முன்னரே தெரியாது.

நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் அவரிடம் கேட்க முடியாமல் போனதில் வருத்தம் ஏதும் இல்லை. ஏனென்றால் ஒரு பெரிய நடிகர் உங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் அருந்துவது எல்லா நாளும் நடப்பதில்லை. அவர் எல்லா விருந்தாளிகளைப் போல எளிமையாக வந்து போனார். எனது பாட்டியிடம்  சென்று தமிழில் உரையாடினார். அவர் வந்து சென்ற இன்ப அதிர்ச்சியில் என்னால் இரவு ஒழுங்காகத் தூங்க முடியவில்லை.

அவருடன் ஒரு நல்ல செல்ஃபி எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனது மொபைல் கேமரா அவ்வளவு நன்றாக இருக்காது. அவருடன் வந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

இந்தச் சந்திப்பை விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.  'டியர் காம்ரேட்'  ஜூலை 26-ம் தேதி அன்று வெளியாகிறது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in