ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? - அமலா பாலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி
'ஆடை' படம் குறித்து ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா என்று அமலா பாலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால், வி.ஜே ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆடை'. விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக இந்தப் படத்தின் நிலை என்ன என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
'ஆடை' படத்தில் அமலா பாலின் துணிச்சலான நடிப்புக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் வெளியீட்டில் பிரச்சினையான போது, அமலா பால் செய்த உதவியால் தான் படமும் வெளியாகியுள்ளது. இதற்கும் தயாரிப்பாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆடை' படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பதிவில், “ரம்யா, ஆடை படத்தைப் பார்த்தேன். உங்கள் அற்புதமான நடிப்புக்கு வாழ்த்துக்கள். குறைந்த நேரமே வந்தாலும் உங்கள் நடிப்பு என்னை ஈர்த்தது. முக்கியமாக காமினி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்கள் உணரும்போதும், உடை மாற்றும் அறையில் நடக்கும் உரையாடலிலும் உங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருந்தீர்கள்.
அமலா, ஆடைக்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியிலும் உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்குத் தயாரா? உங்களுக்கும், இயக்குநருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக, நடிகராக அல்ல, ஒரு ரசிகையாக, பெண்ணாக, பெண்களின் அம்மாவாக.” என்று தெரிவித்துள்ளார்.
'ஆடை' படத்துக்குப் பிறகு, அமலா பால் வேறு எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. விரைவில் அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
