

நடிகர்திலகம் நினைவு நாள் இன்று (21.7.19). அவரின் சாதனைகளை அறிந்து உணர்ந்து, அவரைப் போற்றுவோம்.
61. சிவாஜி கணேசனை சினிமாவில் அறிமுகம் செய்த ’நேஷனல் பிக்ஸர்ஸ்’ பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்போதும் பொங்கலுக்கு சீர்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சிவாஜி குடும்பத்தினர்.
62. சிவாஜிகணேசன் மறைந்து 17 ஆண்டுகளாகிறது. அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய பிறந்த நாள் விழாவை அவருடைய குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிவாஜிகணேசனின் பெயரில் தமிழ்த் திரையுலகில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்கள் சிவாஜி குடும்பத்தினர்.
63. ஜூலை 21-ம் தேதி என்பது சிவாஜி ரசிகர்களால மறக்க முடியாத நாளாகும். ஆம்... அதுதான் அந்த சிம்மக் குரலோனின் நினைவு நாளாகும்!
64. ‘நீ எனது கிழிஞ்சுபோன என் புத்தகத்தை ஒட்டிய கோந்து...
என் அம்மியின் அரைச்ச பட்ட மிளகா சாந்து...
லோட்டாவில் மொண்ட பானைத் தண்ணி...
எங்க ராத்திரிக்கு வெளிச்சம் தந்த சிம்னி...’
- என்று சிவாஜிகணேசனை நித்தம் தனது கவிதை வரிகளால் நினைவுகூர்பவர்... பத்திரிகையாளர் மானா பாஸ்கரன்!
65.தமிழக அரசு - நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு ரூ.1,000-மும், மதுரை சோமுவுக்கு ரூ.1,000-மும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, நேர்மையின் சிகரமாகவே வாழ்ந்து, வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 மட்டுமே நிதி உதவி வழங்கியது. இதை அறிந்துகொண்ட சிவாஜிகணேசன் துடிதுடித்துப் போனார். தன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கக்கனுக்கு அளித்ததுடன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடித்து கிடைத்த தொகை முழுவதையும் கக்கனுக்கு நிதியாக வழங்கி மகிழ்ந்தார்.
66. கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 47 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் தனது சொந்தச் செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து நினைவு சின்னமாக்கிய பெருமைக்குரியவர் சிவாஜி!
67. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 8 ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் தலைவராக இருந்தபோது, அந்தச் சங்க கட்டிட வளாகத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் ஒரு அரங்கத்தைக் கட்டினார்!
68.இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் மிகப் பெரிய வெண்கல மணியை நிர்மாணித்தார் சிவாஜி!
69. தியாகராய நகரில் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ இருக்கும் சாலை... முன்பு சவுத் போக் ரோடு என்றழைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு சவுத் போக் ரோடுக்கு தமிழக அரசு செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயரிட்டது!
70. சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை சிவாஜி கணேசன் வாங்குவதற்கு முன்பாக - முன்னாள் கவர்னர் கே.சி.ரெட்டி என்பவருடைய வீடாக இருந்தது. அதன் பிறகு,கும்பகோணத்தில் இருந்த ‘உலகம் மார்க்’ பட்டணம் பொடி கம்பெனியிடம் இருந்தது. அதையடுத்து, ஒரு இஸ்லாமியரிடம் இருந்தது. அப்புறம்தான் - அந்த வீட்டை சிவாஜி கணேசன் 2 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார்!
தொகுப்பு : மானா பாஸ்கரன்