

பாரதிராஜாவைத் தலைவராக தேர்வு செய்ததை தவறு என்று சொல்ல நீங்கள் யார் என்று மனோபாலா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
2019-2021 ஆம் ஆண்டுக்கான இயக்குநர் சங்கத் தேர்தல் இன்று (ஜுலை 21) நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் கலந்து கொண்டு வாக்களித்து வருகிறார்கள். தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தமாக 19 பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு இயக்குநர் மனோபாலா பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது, “தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநர் விக்ரமன், செல்வமணி ஆகியோர் நல்ல புரிதலில் இருக்கிறார்கள். இங்கே நடக்கும் தவறு என்னவென்றால் இங்கே இயக்குநர்களுக்கு ஒப்பந்தம் உண்டு, ஆனால் உதவி இயக்குனர்களுக்கு கிடையாது.
அதற்காகத்தான் அவர்கள் எந்தப் படத்தில் வேலை செய்கிறார்களோ அந்தத் தகவலை இயக்குநர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு புது திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அதேபோல் அவர்களுக்கு தின சம்பளம் கொடுத்து விட வேண்டும். ஆனால் அதையும் சிலர் நாங்கள் என்ன கூலித்தொழிலாளர்களா என்று விமர்சிக்கின்றனர்.
எதிர் தரப்பில் இருப்பவர்கள் பொதுக்குழுவுக்கே வராத ஆட்கள். அவர்கள் எப்படி பேச முடியும். எல்லா விளக்கமும் கொடுத்த பின்பும் முறையற்ற வெற்றி என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம். பொதுக்குழுவில் 1500 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரதிராஜா. அதை தவறு என்று சொல்ல நீங்கள் யார்? ” என்று பேசியுள்ளார் மனோபாலா
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் நாதன், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படவுள்ளன.