

6 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் கிடைத்த வெற்றி என்று 'கூர்கா' படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ரவீந்தர் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, ரவிமரியா, ஆனந்த்ராஜ், மனோ பாலா, ராஜ்பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கூர்கா'. 4 மங்கீஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் யோகி பாபுவை தவிர்த்து இதர படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் லிப்ரா நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் பேசும் போது, “சினிமா மீதுள்ள காதலால் இந்தத் துறைக்குள் வந்தேன். முதலில் 'நளனும் நந்தினியும்' என்ற படம் பண்ணினேன். எவ்வித பிரச்சினையுமின்றி முடித்தேன். அதற்குப் பிறகு எப்படி வெளியிடுவது என்று தெரியாமல், ஒரு தவறான ஆட்களிடம் கொடுத்தேன். படம் வெளியானதும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மிகப்பெரிய தோல்வி.
'சுட்டகதை' படம் எடுத்தேன். அதுவும் தோல்வி. 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற ஒரு படம் எடுத்தேன். படத்தை வெளியிடவே 3 ஆண்டுகளானது. இடையே ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தேன். அதுவும் தோல்விப் படம். எவ்வித வெட்கமும் இல்லாமல், தோற்றுவிட்டேன் என்று சொன்னேன். 67 திரையரங்குகளில் வெளியிட்டு, படம் ப்ளாப் என்பதை பதிவுச் செய்தேன். அதற்கு சக்சஸ் மீட் வைக்காமல், தேங்க்ஸ் மீட் வைத்தேன்.
அதிலிருந்து 30 நாட்களில் 'கூர்கா' படம் வாங்கி, விநியோகத் துறைக்குள் வந்தேன். 300 திரையரங்குகளில் வெளியிட்டேன். வாங்கிய விலையைத் தாண்டி கடந்த புதன்கிழமை அன்று 5 லட்சம் ரூபாய் லாபமாக வந்தது. அது தான் சினிமாவில் என் முதல் சம்பாத்தியம். இன்றைக்கு மொத்தம் 15 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளேன்.
தற்போது வரை மொத்த வசூலாக 6 கோடி 56 லட்சம் கடந்துள்ளது. 5 கோடி 32 லட்சம் ஷேர் போக கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலமாக 6 ஆண்டுகள் கழித்து லாபம் என்று ஒன்று பார்த்திருக்கிறேன். சினிமா மீது எனக்கு விடா நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் என் வேலையை நான் சரியாக செய்து கொண்டே இருக்கிறேன்.
மூன்று படத்துக்குப் பிறகு தயாரிப்பில் இருந்து விநியோகத்துக்கு மாறினேன். அதில் நிறைய சிரமங்கள் இருந்தது. ஆனால், நேர்மையாக கொண்டுச் சென்றால் ஜெயிக்க முடியும் என்று மட்டுமே நம்பினேன். என்னை நம்பி படம் கொடுத்தவரும் சம்பாதிக்கணும், என்னை நம்பி படத்தை வாங்கியவரும் சம்பாதிக்கணும். அது தான் முக்கியம். நியாயமான விலையில் விற்றது மட்டுமே இந்தப் படம் ஜெயித்ததுக்குக் காரணம்.
சமீபத்தில் ஒரு பெரிய படத்தின் வியாபாரத்தை முடிக்கும் அளவுக்கு வந்தேன். இறுதியாக பலரும் அந்தப் படத்தை வெளியிட எனக்கு தகுதியில்லை என்றார்கள். சரியாக விளம்பரப்படுத்தி வெளிக்கொண்டு வந்து, நேர்மையான விநியோகஸ்த நிறுவனமான என் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டேன்.
என்னை நம்பி முதல் படம் கொடுத்த சாம் ஆண்டன், வெற்றி கொடுத்திருக்கிறார். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அவர் நினைப்பது போல் ஒரு படத்தை என் நிறுவனம் தயாரிக்கும். இதற்கு முன்பு நான் தயாரித்த படங்களின் இயக்குநர்களும் நல்லவர்கள். அவர்களுடைய படத்தை நான் சரியாக கொண்டு போய் சேர்க்கவில்லை என்பது தான் உண்மை” என்று பேசினார் ரவீந்தர் சந்திரசேகரன்