

வி.ராம்ஜி
‘’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்கு எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு செலவாயிற்று, அந்தக் காலத்துல கதைல தயாரிப்பாளர்கள் இன்வால்வ் ஆனாங்க. ஏவிஎம்.சரவணன் சார் சொல்லித்தான் மனோரமா கேரக்டர், ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்குள்ளே கொண்டு வந்தேன்’ என்று இயக்குநர் விசு தன் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.
1986ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, ‘சம்சாரம் அது மின்சாரம்’ ரிலீசானது. படம் வெளியாகி 33 வருடங்களாக்விட்டன. நடிகரும் இயக்குநருமான விசு, ‘இந்து தமிழ் திசை’ ஆன்லைனுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் கதையைச் சொன்னேன். ஏவிஎம்.சரவணனும் பாலசுப்ரமணியமும் ஓகே சொன்னார்கள். இந்தப் படத்துக்கு பட்ஜெட் பதிமூணரை லட்சம் ரூபாய். அவுட்டோர், மற்றச் செலவுகள் என்றெல்லாம் பார்த்தால், மொத்தம் 18 லட்சம் ரூபாய்க்குள் செலவானது.
ஏவிஎம்மில், வீடு செட் போட்டுக் கொடுத்தார்கள். மொத்தம் 41 நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டோம். அதற்கு நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்பும் மிக முக்கியக் காரணம். படத்தில், இந்தந்த கேரக்டருக்கு இவர்கள்தான் நடிகர் நடிகைகள் என்று ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அப்போதுதான் ஒருநாள், ஏவிஎம். சரவணன் சார், என்னை அழைத்தார். ‘படம் நல்லாருக்கு. ஆனா கொஞ்சம் காமெடி குறைச்சலா ‘ட்ரை’யா இருக்கு. ஒண்ணு செய்யலாமா’ன்னு கேட்டார். சொல்லுங்க சார்னு சொன்னேன்.
‘அந்த வீட்ல ஒரு வேலைக்காரக் கேரக்டரை கொண்டுவாங்க. அதுல மனோரமா ஆச்சி நடிச்சா, படத்தையும் காமெடியாக்கிருவாங்க’ன்னு சொன்னார். அவர் சொன்னதுல எனக்கும் உடன்பாடுதான். அப்புறம், கதைல, மனோரமா ஆச்சி கேரக்டரை உள்ளே செருகிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நான் முதல்ல பண்ணின காட்சிகளை உருவி எடுத்துட்டேன். மனோரமாவும் தன் நடிப்பால அந்தக் கேரக்டரே கொண்டாட வைச்சாங்க.
அந்தக் காலத்துல, தயாரிப்பாளர்கள் இயக்குநர்களை மதிச்சாங்க. அவங்களோட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. அந்தக் கதைக்குள்ளே ‘இன்வால்வ்’ ஆனாங்க. இப்போ, அப்படியெல்லாம் இல்லை.
இவ்வாறு விசு தெரிவித்தார்.
விசுவின் வீடியோ பேட்டியைக் காண...