

வி.ராம்ஜி
‘’ ’அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவுக்கு மட்டுமில்லை... எனக்கும் முதல் படம்தான். படத்தின் க்ளைமாக்ஸை வைத்து, முதல் காட்சியை எடுத்தார் பாரதிராஜா சார் ’’ என்று சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
ஜூலை மாதம் 18ம் தேதி, 1981ம் ஆண்டு, ‘அலைகள் ஓய்வதில்லை’ ரிலீசானது. படம் வெளியாகி, 38 ஆண்டுகளாகிவிட்டன.
இதுகுறித்து, நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் ‘இந்து தமிழ் திசை’ ஆன்லைனுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
நான் பத்திரிகையாளனாக இருக்கும் போதிருந்தே பாரதிராஜா சாருக்கும் எனக்கும் பழக்கம் உண்டு. பிறகு, அவர் இயக்குநரானதும் பி.ஆர்.ஓ. வாக பல படங்களில் பணியாற்றினேன். அவரிடம் இருந்து பாக்யராஜ் மாதிரியானவர்களெல்லாம் வெளியே சென்று இயக்குநராகிக் கொண்டிருந்த சமயம். இன்னும் சிலர் அவரிடம் உதவி இயக்குநராக வந்தார்கள்.
அப்போது ஒருநாள், பாரதிராஜா சார் அழைத்தார். ‘இந்தப் படத்துலேருந்து நீ உதவி டைரக்டர்’ என்றார். அந்தசமயத்தில், காஸ்ட்லியான, அதிக அளவிலான நடிகர் நடிகைகளுக்கு நான் பி.ஆர்.ஓ.வாக இருந்தேன். வருமானம் என்று பார்த்தால், உதவி டைரக்டராகிவிட்டால் குறைவுதான். ஆனாலும் இதைவிட வேறென்ன வேண்டும் என்று யோசித்தேன். பாரதிராஜா சாரிடம் உதவி டைரக்டராக சேர்ந்துவிட்டேன்.
அடேங்கப்பா... எவ்வளவு அனுபவங்கள். கன்யாகுமரி மாவட்டத்தில், முட்டம் பகுதியில்தான் ஷூட்டிங் நடந்தது. ராதா அறிமுகம். முதன்முதலாக ஒரு பாடல் காட்சி எடுத்தோம். மிகப்பிரமாதமாக பாரதிராஜா சார் படமாக்கியிருந்தார். ஆனால், படத்தின் நீளம் கருதி, அந்தப் பாடல் காட்சி இடம்பெறவில்லை. ஆனாலும் படத்தின் ரிக்கார்டு பிளேயரில் அந்தப் பாடலும் இடம்பெற்றது. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டடித்தது. படத்தில் இல்லாத அந்தப் பாடலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதுதான் ‘புத்தம்புதுக்காலை பொன்னிற வேளை’ என்ற பாடல்.
படமாக்கும் போதே, இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால், படத்தில் இந்தப் பாடல் இல்லை என்றதும் ரொம்பவே வருந்தினேன். ராதா, இந்தப் பாடலில் மிகப்பிரமாதமான எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்திருப்பார்.
ஓர் ஆச்சரியமான விஷயம்... படத்தில், கார்த்திக், ராதா, தியாகராஜன் எல்லோருக்கும் இதுதான் முதல்படம். ஆனால், முதல் படம் என்பது போல நடித்திருக்கமாட்டார்கள். சிறந்த நடிப்பைத் தந்தார்கள். சொல்லப்போனால், இந்தப் படத்தில் பாரதிராஜா சாரிடம், இவர்கள் ஒருகாட்சியில் கூட திட்டு வாங்கவே இல்லை. அடுத்தடுத்த படங்களில், திட்டு வாங்கினார்கள், அடி வாங்கினார்கள் என்பதெல்லாம் வேறுவிஷயம். ஆனால், முதல் படம் போல இல்லாமல், சிறப்பாக நடித்திருந்தார்கள்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து யோசனையாகவே இருந்தார் பாரதிராஜா சார். அப்போது ஒருநாள், விளையாட்டாக, ‘அந்தப் பையன் பூணூலையும் அந்தப் பொண்ணு சிலுவை டாலரையும் அறுத்துட்டு, ‘எங்களுக்கு மதமே இல்ல’ன்னு சொன்னா எப்படி சார் இருக்கும்?’ என்று கேட்டேன். உடனே அந்தக் காட்சியை அழகாக விரிவுபடுத்தினார் டைரக்டர் சார். அதுமட்டுமல்ல... க்ளைமாக்ஸ் சீனை வலுப்படுத்துவதற்காகவே, முதல் காட்சியில் பையனுக்கு பூணூல் கல்யாணம் செய்வது போலவும் பெண்ணுக்கு ஞானஸ்நானம் செய்து அப்பம் வாங்குவது போலவும் காட்சி வைத்தார். இதெல்லாம் மறக்கவே முடியாது.
அதன் பிறகு, பாரதிராஜா சாரிடம், ஏராளமான படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.
இவ்வாறு சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.