’ இனி, நீ சிவாஜி கணேசன்!’
சிவாஜிகணேசன் நினைவு நாள் இன்று (21.7.19). இந்தநாளில், நடிகர்திலகத்தை அறிந்து உணர்ந்து சிலிர்க்க, சில தகவல்கள்...
1. விழுப்புரம் சின்னையா கணேச மூர்த்தி என்பதுதான் சிவாஜி கணேசனுடைய இயற்பெயர். அந்தக் காலத்தில் அவர் விழுப்புரம் கணேசன் என்றும் அழைக்கப்பட்டார். 1928-ம் வருஷம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்.
2. சிவாஜி கணேசன் தந்தை பெயர்: சின்னையா மன்றாயர் . தாயின் பெயர்: ராஜாமணி அம்மாள்.
3. சிவாஜிகணேசனின் மனைவி பெயர்: கமலா; மகன்கள்: ராம்குமார், பிரபு. மகள்கள்: சாந்தி, தேன்மொழி.
4. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம்பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக் கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் கணேசனைக் கவர்ந்தன. அருகில் வசித்த காகா ராதா கிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி தேவர் ஹால் நாடகக் குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக் குழுவில் காகா ராதாகிருஷ்ணன், சிவாஜியைச் சேர்த்துவிட்டார்.
5. சிவாஜிகணேசன் நாடகத்தில் முதன்முதலில் பெண் வேடம்தான் போட்டார். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்! அந்த நாடகத்தின் பெயர்: `ராமாயணம்.’
6. பேரறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் பேரரசன் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத் திறனை மெச்சிய தந்தை பெரியார்தான், இவருக்கு 'சிவாஜி' கணேசன் என்று பெயரிட்டார்.
7. சிவாஜியோடு பேரறிஞர் அண்ணா நடித்திருக்கிறார் தெரியுமா? ஆம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில்தான்... அண்ணா ’காகபட்டர்’ வேடத்தில் நடித்திருக்கிறார்.
8, சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
9. தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
10. 1952-ல் ஏவி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவாஜியை வைத்து படம் தயாரிக்க விரும்பினார் பி.ஏ.பெருமாள். ஆனால் சிவாஜியை கதாநாயகனாக ஏற்க ஏவிஎம் செட்டியார் விரும்பவில்லை. பி.ஏ.பெருமாள்தான் நம்பிக்கையோடு சிவாஜியை ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக்கினார்.
தொகுப்பு : மானா பாஸ்கரன்
